
நாட்டிலேயே புதுச்சேரியில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தொற்றின் இரட்டிப்பு காலம் புதுச்சேரியில் தற்போது 14 நாட்களாக உள்ளது. நாட்டிலேயே இது மிக வேகமான ஒன்று. கொரோனா தொற்றுப் பரவலின் காரணமாக படுக்கை வசதிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் கரோனா படுக்கை வசதி ஜிப்மரில் 200-ல் இருந்து 325 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு பிராண வாயு மற்றும் உயர் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.
இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு தீவிர சிகிச்சை தரக்கூடிய மருத்துவ பணியாளர்களின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவால் அதிக மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உயர் சிறப்பு சிகிச்சை பிரிவுகளில் மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் சேவை நின்று போகும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
மருத்துவமனையில் பிராண வாயு அளிக்கக்கூடிய படுக்கைகள் உயர் தீவிர சிகிச்சை தரக்கூடிய வசதிகள் ஆகியவற்றின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தேவைகளை இதர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு உபயோகிப்பதை குறைப்பதன் மூலமாக பூர்த்தி செய்ய இயலும்.
ஜிப்மரில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அரசு தரவுகளில் குறைத்து காண்பிக்கப்படுகிறது. புதுச்சேரியில் வசிப்போர் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவதே காரணமாகும். இதர மாநிலங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்கு அனுமதிக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவிட் வளாகத்துக்கு மாற்றம் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் நாள்பட்ட நோய்களுக்கு தரப்படும் நேரடி வெளிப்புற சேவை வரும் ஆகஸ்ட் 24 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அவசர கால சிகிச்சை, நாள்பட்ட நோய்களுக்கு தொலை மருத்து சேவைகள் தொடரும்
என அவர் தெரிவித்துள்ளார்.