
லாக்டவுன் 7.0 : தமிழகத்தில் எவை இயங்கும் ? எவை இயங்காது ? முழு விவரம் !
ஜூலை 31-ஆம் தேதியுடன், அன்லாக் 2.0 முடிவுக்கு வருகிறது. எனவே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் எந்த மாதிரியான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த ஆலோசனையின் போது, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதிகப்படியான தளர்வு கொடுக்க வேண்டாம் என்று மருத்துவ குழு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் கூட்டத்திற்கு பிறகு முதல்வரின் அறிவிப்பு அறிக்கையாக வெளியானது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ பாஸ் பெறும் நடைமுறை தொடரும். அதேபோன்று ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்கும் போதும் வாகனங்களுக்கு இ பாஸ் பெறுவது கட்டாயம் ஆகும். இந்த உத்தரவு ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுக்க பொதுப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதாவது, ரயில்கள், பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுக்க பொதுப் போக்குவரத்துக்கான தடை தொடரும். ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்.
தற்போது 50% ஊழியர்களுடன் இயங்கும் நிறுவனங்கள் 75% ஊழியர்களுடன் இயங்கலாம். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இரவு 7 மணி வரை இயங்கிக் கொள்ளலாம் இவ்வாறு முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மட்டுமின்றி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வருவாய் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். மேலும், அத்தியாவசிய மற்றும் அனைத்து பொருட்களையும் இ காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்யலாம்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் :-
◆மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.
◆அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
◆நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்.
◆தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
◆வணிக வளாகங்கள்
◆பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.
◆மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
◆மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.
◆திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள்,கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
◆அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
◆மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து.
மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.