
கோட்டக்குப்பம் அரசு பள்ளி பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி : சி.இ.ஓ., பாராட்டு
கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் பொதுதேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை, சி.இ.ஓ., முனுசாமி பாராட்டி, கவுரவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி கடந்த இரு ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சியடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுதேர்வில் பள்ளி மூன்றாவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. நேற்று முன்தினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியை ஆய்வு செய்தார். முன்னதாக செய்த ஆய்வின் போது, பள்ளி மூன்றாவது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால் பரிசு வழங்கப்படும் என மாணவர்களிடம் கூறி இருந்தார்.இதன்படி பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய 39 மாணவர்களும், தேர்ச்சியடைந்ததையொட்டி, முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, அவர்களுக்கு 12ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்று மற்றும் பரிசு பொருள் வழங்கி கவுரவித்தார். மாணவர்களின் 100 சதவீத வெற்றிக்கு ஆசிரியர்களை பாராட்டினார்.