Credit: Vikatan

ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொடிநாள் என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனர் அதிகாரிகள் சிலர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது அதிகரட்டி பேரூராட்சி. தேயிலை மற்றும் மலைக் காய்கறியை முக்கியத் தொழிலாக கொண்டுள்ள பல கிராமங்களை உள்ளடக்கிய இந்தப் பேரூராட்சியில்தான் விதிமீறல் கட்டடங்களுக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் சட்டவிரோத காட்டேஜ்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து கொள்ளை லாபம் ஈட்டி வருவதாக சூழல் ஆர்வலர்கள் புகார் வாசிக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கால் தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் தடைப்பட்டுள்ளன. இதனால் பேரூராட்சியில் உள்ள சில அதிகாரிகளின் மாமூல் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதை ஈடுகட்டும்விதமாக நூதன கொள்ளையடிக்க முடிவு செய்து அலுவலகத்துக்கு வரும் அத்தனை பேரிடமும் கொடிநாள் வசூல் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதிகரட்டி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “பல ஆண்டுகளாக போராடி கடன்பட்டு ஒரு வீட்டைக் கட்டி முடித்தேன். மின் இணைப்பு பெறுவதற்காக வீட்டுக்குக் கதவு எண் வாங்க அதிகரட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இரண்டு மாதங்களாகப் போராடி வருகிறேன், தராமல் இழுத்தடிப்பு செய்தனர்.
கொடிநாளுக்கு 5,000 கொடுத்தால்தான் கதவு எண் தரப்படும் என கூறினர். என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்றேன். `பரவாயில்லை. மூன்று நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் ஐந்தாயிரத்தைக் கொடுத்துவிட்டு கதவு எண்ணை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றனர்.
மேலும், `மாவட்ட ஆட்சியர் தான் வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்’ என ஆட்சியர் மீது வீண்பழி சுமத்துகின்றனர். என்னைப்போன்றே அலுவல் நிமித்தமாக பஞ்சாயத்து அலுவலகம் வருகிற அனைவரிடமும் இதே மாதிரியான வசூலில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் புகார் குறித்து அதிகரட்டி பேரூராட்சி அலுவலர் ஒருவரிடம் பேசினோம் “அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் 500, 300 ரூபாய் வாங்குகிறோம். ஆயிரக்கணக்கணக்கில் கேட்பதில்லை” என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேசுகையில், “ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொடிநாள் என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு கையாடல் செய்யும் அதிகாரிகள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.