கைது செய்து காவல் நிலையம் அழைத்து வருபவர்களை உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடத்த வேண்டும், யாரையும் அடிக்கக்கூடாது, அது சட்டப்படி தவறு. பொதுமக்களை மனம் நோகும்படி பேசக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தங்க சாலை மணிகூண்டு அருகே வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
‘தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு சென்னையில் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்கள். வாகன போக்குவரத்து, பொதுமக்கள் போக்குவரத்து தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை.
இன்று அதிகாலையில் இருந்தே காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நல்ல முறையில் செயல்படுகிறது.
இதுவரை 52,234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 60,131 வழக்குகள் பதிவு 144 தடையை மீறியதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24,704 வழக்குகள் முக கவசங்கள் அணியாமை, தனி மனித இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி இ-பாஸ் மூலம் சென்றதற்காக 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என கூறி போலி இபாஸ் மூலம் பயணித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எப்போதும் இதே போல முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இ-பாஸை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். அது குற்றம். போலியாக தயாரித்து இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்யாவசிய தேவைகளுக்கு அரசே ஒரு வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதை சாதாரண பணிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.
பொதுமக்கள் இதுவரை அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி. 12 நாள் ஊரடங்கு. இன்று 10 வது நாள், இன்னும் இரண்டு நாள் உள்ளது. இந்தக்காலக்கட்டத்தில் நாம் கட்டுப்பாடோடு இருந்தால் தான் நாம் நோய்த்தொற்றை வெல்ல முடியும். அரசின் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். தவறான எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.
கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்படுபவர்களை என்ன மாதிரி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பது தொடர்பான சட்டங்களும் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளு உள்ளது. குறிப்பாக அடிப்பதோ, துன்புறுத்துவதோ கூடாது.
சென்னை பெகருநகர காவல்துறையைப் பொருத்தவரை, தமிழக காவல்துறையிலும் நாம் திருப்பி திருப்பி சொல்லி வருவது யார் மனதையும் புண்படும் வகையில் கூட பேசக்கூட கூடாது என சொல்கிறோம். அப்படி இருக்கும்போது அடிப்பது என்பது சட்டப்படி தவறு. அது தொடர்பாக அனைத்து காவல்துறையினருக்கும், காவல் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தி உள்ளோம்.
சென்னை காவல்துறையில் இதுவரை 1065 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு நிவாரண நிதி கிடைப்பது தொடர்பான நடவடிக்கை சம்பந்தமான கருத்துரை அனுப்பியுள்ளோம் பரிசீலனையில் இருக்கிறது.
தொற்று நோய் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் 28 நாள் சிகிச்சைப்பெற்றால் கூட முழுவதும் உடலளவிலும், மனதளவிலும் தெம்பாக இருப்பவர்கள் பணிக்கு வந்தால் போதும் என வலியுறுத்தியுள்ளோம். அப்படி பணிக்கு திரும்பியவர்கள்தான் மேற்கண்ட 410 பேர்’.
இவ்வாறு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.