
“வெட்டுக்கிளிகள் கூட்டம் காலை 11 மணியளவில் வரத்தொடங்கியது. நாங்கள் உடனடியாக கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டோம்.”
ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளின் வழியாக இரான் வந்து அங்கிருந்து பாகிஸ்தான் வந்து இந்தியாவுக்குள் சில வாரங்களுக்கு முன்னால் நுழைந்தன கொடூரமான பாலைவன வெட்டுக்கிளிகள்.
ஈரப்பதமான பகுதிகளில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும் இந்த வெட்டுக்கிளிகள், ஒரேநாளில் தங்களது உடல் எடைக்கு நிகராக உணவுகளை உண்ணக்கூடியவை. சுமார் 35,000 பேர் உண்ணக்கூடிய உணவை இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் ஒரேநாளில் தின்று தீர்த்துவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், பயிர்கள் அதிகளவில் பாதிப்படைகின்றன. விவசாயிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை அளிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் அதிக பாதிப்புகளை தற்போது ஏற்படுத்தி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இந்த வெட்டுக்கிளிகள், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தின. இதையடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், அதன் அருகில் உள்ள மாநிலங்கள் கடுமையான எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றன. ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்கள் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகளுடன் கூடிய தனி குழு ஒன்றையும் நியமித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது பாலைவன வெட்டுக்கிளிகள் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் நுழைந்துள்ளன. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் வானத்தையே மறைக்கும் அளவுக்கு பறக்கும் வீடியோக்களும் வீட்டின் மாடிகள் மற்றும் பால்கனி பகுதிகளை இந்த வெட்டுக்கிளிகள் பொதிந்த வண்ணம் இருக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
குருகிராம் பகுதிக்கு அருகில் நேற்று வெட்டுக்கிளிகள் காணப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக அப்பகுதி அதிகாரிகள் குருகிராம் பகுதி மக்களிடம் ஜன்னல்களை மூடி வைக்குமாறு வலியுறுத்தினர். பூச்சிகளைத் தடுக்கும் வகையில் பாத்திரங்களைக் கொண்டு ஒலி எழுப்ப வேண்டும் என்றும் மக்களிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குருகிராம் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவர், “வெட்டுக்கிளிகள் கூட்டம் காலை 11 மணியளவில் வரத்தொடங்கியது. நாங்கள் உடனடியாக கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டோம். கட்டடங்களில் வெட்டுக்கிளிகளை விரட்ட நிறுவப்பட்டிருந்த ஹீட்டர்களையும் அதிகாரிகள் இயக்கத் தொடங்கினர்” என்று கூறினார்.
அதிகாரிகள் இதுதொடர்பாக பேசும்போது, “விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க பம்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும் எனக் கூறியிருந்தோம். பம்புகள் தேவைப்படும் பட்சத்தில் அதை உடனடியாக பயன்படுத்தலாம். கதவு மற்றும் ஜன்னல்களை மூடவும் பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பவும் கூறியிருந்தோம்” என்று கூறினர்.
கிராமப்பகுதிகளில் வெட்டுக்கிளிகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியது. வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு 11 கட்டுப்பாடு அறைகளையும் அமைத்துள்ளது.
ஹரியானாவின் தலைமைச் செயலாளர் கெஷ்னி ஆனந்த், வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேளாண்மைத்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு கடந்த மாதமே உத்தரவிட்டார். தற்போது பாதிப்படைந்த மற்றும் பாதிப்படைந்து வரும் மாநிலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குருகிராம் பகுதி டெல்லிக்கு அருகில் இருப்பதால், டெல்லி பகுதி மக்களும் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Credit : vikatan