“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து மட்டுமல்ல… வீட்டு மின்கட்டணமும் உயரும்!”


கொரோனா தொற்றுப் பரவலால் நாடு தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், தங்களுக்குச் சாதகமாக பல்வேறு பணிகளை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது மத்திய அரசு.

குறிப்பாக, மாநில அரசுகளின் உரிமைப் பறிப்புகள். ஒரே நாடு ஒரே ரேஷன், புதிய கல்விக்கொள்கை, காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரத்தைப் பறித்தது… என உதாரணம் நிறைய சொல்லலாம். மத்திய அரசின் அடுத்த அதிரடி, மின்சாரச் சட்டத்தில் கொண்டுவரப்படும் சில திருத்தங்கள்.
மின்சாரச் சட்டம் 2003-ம் ஆண்டில் பல திருத்தங்கள் செய்து, புதிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது மத்திய அரசு. ஏப்ரல் 17-ம் தேதி இதற்கான வரைவுச் சட்டம் மாநில அரசுகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, கொரோனா காலத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை சத்தமில்லாமல் நிறைவேற்றத் துடிக்கிறது மத்திய அரசு. “இந்தச் சட்டத்திருத்தம், பெருமுதலாளிகளுக்குச் சாதகமாகவே கொண்டுவரப்படுகிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.

திருத்தங்களும்… எழும் சிக்கல்களும்!

‘மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள், மின் உற்பத்திச் செலவுக்கு இணையாக மின்கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அரசு அளிக்கும் மானியங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவை நேரடியாக நுகர்வோருக்குச் சென்றுவிடும்’ என்கிறது புதிய திருத்தச் சட்டம். ஆக, இனி மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் மானியமில்லாத முழு மின்கட்டணத்தையும் நுகர்வோர் கட்டிவிட வேண்டும். அவர்களுக்கான மானியம் வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்படும். தமிழ்நாட்டில் ஒரே மின் இணைப்பில் இரண்டு, மூன்று பங்காளிகள் விவசாயம் செய்கிறார்கள். மின் இணைப்பு ஒருவர் பெயரில் இருக்கும். யார் பெயரில் இணைப்பு இருக்கிறதோ அவருக்குத்தான் மானியம் போகும்.

பெரும்பாலான வாடகைக் கட்டடங்களில் உரிமையாளர் பெயரில்தான் மின் இணைப்புகள் இருக்கின்றன. வாடகைதாரர்கள் மின்கட்டணத்தைக் கட்டிவருகிறார்கள். இனிமேல் வாடகைதாரர் மின்கட்டணத்தைக் கட்டினாலும், உரிமையாளருக்குத்தான் மானியம் போகும். ஏற்கெனவே, கட்டட உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் சட்டவிரோதமாக கூடுதல் மின்கட்டணத்தை வசூலித்துவரும் நிலையில் அவர்கள் மானியத் தொகையை வாடகைதாரர்களுக்குத் திருப்பித் தருவார்களா? இப்படி பல குழப்பங்கள். இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பெரும் பொருளாதாரச் சிக்கலாக உருவெடுக்கும்.

தொடரும் மாநில அரசின் உரிமைகள் பறிப்பு!

2003-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சாரச் சட்டம், மாநில அரசுகளின் பல உரிமைகளைப் பறித்தது. குறிப்பாக, கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தின்படி, ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசே தேர்வுசெய்யும். இதனால், மாநில அரசுகளின் அதிகாரம் முற்றிலுமாகப் பறிக்கப்படும்.
மின்சாரச் சட்டம்-2003, மின்சார உற்பத்தியிலிருந்து மாநில மின்வாரியங்கள் விலகியிருக்க வேண்டும் என்றது. அதைப் பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியில் இறங்கின. பல மாநில அரசுகள், தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டன. உற்பத்தி நிறுவனங்களும் அதிக விலைக்கு மின்சாரத்தை விற்றன. இந்த ஒப்பந்தங்களின் முக்கியமான அம்சம், ‘மின்சாரத்தை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் குறிப்பிட்ட தொகையை உற்பத்தி நிறுவனத்துக்கு விநியோக நிறுவனங்கள் கொடுக்க வேண்டும்’ என்பதுதான். இதனால் ஒரு யூனிட் மின்சாரம்கூட வாங்காத மாநில அரசு நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான கோடிகளை உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன. இதை பல மாநில அரசுகள் விரும்பவில்லை. ஒப்பந்தத்தைச் செயல்படுத்தாமல் எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில்தான் புதிதாக ஒப்பந்தச் செயலாக்க ஆணையத்தை அமைக்க சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.
2003-ம் ஆண்டு மின்சாரச் சட்டத்துக்குப் பிறகு, 34 தனியார் அனல்மின் நிலையங்கள் தொடங்கப்பட்டன. மின்தட்டுப்பாடு சீராகத் தொடங்கியதும், மின்சாரத்தை வாங்க ஆள் இல்லை. அத்துடன் விலை தகராறுகளும் உருவாகின. இதனால் பல மின் நிலையங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. செலவு அதிகரித்தது. கடன் கொடுத்த வங்கிகள் நெருக்கடி தரத் தொடங்கின. தனியார் மின் நிலையங்கள் லாபகரமாக இயங்கினால்தான், அந்தக் கடன்தொகை வங்கிக்குக் கிடைக்கும். அதற்கு மாநில மின் வாரியங்கள், மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும். அதை வலியுறுத்துவதுதான் இந்தச் சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்.
இதுகுறித்துப் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், ‘‘இலவச மின்சாரம் மட்டும் இல்லாமல் இருந்தால், தமிழகத்தில் விவசாயத் தற்கொலைகள் இன்னும் அதிகரித்திருக்கும். விவசாயிகள் பல்வேறு துயரங்களையும் தாங்கிக்கொண்டு விவசாயம் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது இலவச மின்சாரம்தான். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதன்மூலமோ குறைந்தளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதன்மூலமோ அரசுக்கு பெரியதாக நஷ்டம் ஏற்படாது. தவிர, அந்த மானியத்தை சரிக்கட்ட வேறு வழிகளில் பணம் வசூல் செய்துவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் ஒருநாள் சராசரி மின்தேவை 16,000 மெகாவாட். இதில் 6,000 மெகாவாட் தனியார் நிறுவனங்கள்மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. 3,000 மெகாவாட் மத்திய அரசுமூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. 1,000 மெகாவாட் மட்டுமே தமிழக அரசு உற்பத்தி செய்கிறது. தமிழக அரசால் 6,500 மெகாவாட் தயாரிக்க முடியும். ஆனால், உற்பத்தி நடைபெறுவதில்லை. தற்போது கொரோனா காரணமாக தொழிற்சாலைகள் இயங்காததால் 10,000 மெகாவாட் மட்டுமே போதும்.

தனியாரிடம் மின்சாரத்தை வாங்காமல் தமிழக அரசு உற்பத்தி செய்தால் ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால், தற்போது தனியார் மின்நிலையங்களிடமிருந்து ஒரு யூனிட் 3 ரூபாய் 10 பைசாவுக்கு வாங்குகிறது. இன்னொரு பக்கம் ஒப்பந்தம் செய்துகொண்டதால் வேறுவழி இல்லாமல் அதானி குழுமத்திடம் இருந்து சோலார் மின்சாரத்தை யூனிட் 7 ரூபாய் 10 பைசாவுக்கு வாங்குகிறது. மற்ற நிறுவனங்களிடமிருந்து யூனிட் 2.30 பைசாவுக்கு சோலார் மின்சாரத்தை வாங்குகிறது. இவற்றை யெல்லாம் சரிசெய்தாலே தமிழக மின்வாரியம் லாபத்தில் இயங்கும்’’ என்றவர், மேலும் சில ஆபத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

வெளிநாடுகளுக்கு மின் ஏற்றுமதி!

‘‘மின்சார திருத்தச் சட்டம் 2020 நடைமுறைக்கு வரும்போது, இலவச மின்சாரம் ரத்துசெய்யப்படும் என்பது மட்டும்தான் பிரச்னையாக இருக்கும் என சிலர் நினைக்கிறார்கள். அதைவிட பெரிய ஆபத்தும் இதில் இருக்கிறது. சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு மின்சாரத்தை விற்பதற்காக இந்திய விவசாயிகளின் நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்கவும் இந்தத் திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
மத்திய அரசு கொண்டுவரவுள்ள மின்சார திருத்தச் சட்டத்தில் பிரிவு 2-ல் உட்பிரிவு 15a, பிரிவு 49-ல் உட்பிரிவு 49a ஆகிய இரண்டு உட்பிரிவுகள் சேர்க்கப்படவுள்ளன. இதன்மூலம் இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யவும், வேறு நாடுகளிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்துகொள்ளவும், வேறு இரண்டு நாடுகள் மின்சாரத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காக இந்திய ஒன்றியத்தை பாதையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்கெனவே பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்காக திட்டப்பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் கொச்சி மற்றும் போர்பந்தர் நகரிலிருந்து கடலுக்கு அடியில் கேபிள் அமைத்து ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டிக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. அப்படிச் செய்யப்பட்டால் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய திட்டமாக இருக்கும்.

பெரும் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வார்கள். இங்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டு, குறு, சிறு விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைத்து வெளிநாடுகளுக்கு மின்சாரத்தைக் கொண்டுசென்று விற்பதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டத்திருத்தம் வழங்கவுள்ளது.

ஏற்கெனவே உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் இந்தியாவில் 23 லட்சம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மதிப்பை இழந்து, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதற்கும், இரு நாடுகளுக்கு இடையே மின்சாரத்தைக் கொண்டுசெல்வதற்கும் மின்கோபுரங்கள் அமைக்க வழிசெய்யும் இந்தச் சட்டத் திருத்தம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்கிவிடும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் துணையுடன் சீனா பெருமளவில் மின்சாரத்தை உற்பத்திசெய்து இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் அரேபிய நாடுகளுக்கும் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல இருக்கிறது. இதை இந்திய உழவர்களின் நிலங்களின் வழியாகக் கொண்டுசென்று விற்பதற்காக திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. எனவே, தமிழக அரசு இந்த மின்சார திருத்தச் சட்டம் 2020-க்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும்’’ என்றார் விரிவாக.
இந்தத் திருத்தச் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ‘மின்சார திருத்தச் சட்டம் – 2020-ல் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் பேசுவார்கள்’ என அறிக்கை கொடுத்திருக்கிறார் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி.
இது தொடர்பாக வழக்கறிஞரும் பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளருமான கனிமொழியிடம் பேசினோம். ‘‘சில மாநில அரசுகள் நிர்வாகத்தை சரியாகக் கையாள்வதில்லை. மாநில மின்பகிர்வு நிறுவனங்களில் லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் நுகர்வோர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதை சரிசெய்வதற்காகவே இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இலவச மின்சாரம் ரத்து என சட்டத்திருத்தத்தில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. மாநில அரசுகள் கொடுக்கும் மானியங்களிலும் தலையிடவில்லை. உண்மையில் நுகர்வோருக்கு நன்மை செய்யவே மத்திய அரசு இந்தத் திருத்தங்களைக் கொண்டுவருகிறது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால் அதை சரிசெய்து கொடுப்பார்கள். இதன்மூலம் மின்கட்டணம் உயரும் என்பதெல்லாம் கற்பனை. குறைவாகக்கூட வரலாம்’’ என்றார்.

கட்டுரை : விகடன்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s