
கோட்டகுப்பதில் எப்போதும் நோன்பின் 27-வது இரவு அன்று பள்ளிவாசல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
இரவுக்கு ஒளி சேர்க்க குழந்தைகள் எல்லாம் புத்தாடைகளுடன் தெருக்களில் வலம் வந்து கொண்டிருப்பார்கள். பெரியவர்களோ பள்ளிவாசல்களில் லைலத்துல் கத்ர் எனும் மகத்துவமிக்க இரவின் நன்மையை எதிர்பார்த்து இரவு முழுவம் தொழுகையிலும் வணக்க வழிபாடுகளிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
குறிப்பாக ஜாமி ஆ மஸ்ஜித் போன்ற பெரிய பள்ளிகளில் இரவு முழுவதும் பயான் நடைபெறும் . வீடுகளில் நடைபெறும் தராவீஹ் தொழுகைகளுக்கும் பெண்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகம் இருக்கும்.
ரமலான் மாதம் முழுவதும் ஈத் பெருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் 27-ம் நாளன்று பெருநாளுக்கான எதிர்பார்ப்பு உச்ச நிலையை அடைந்து பெருநாள் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாகவே 27ம் கிழமை மாறிவிடும்.
பெரும்பாலும் பள்ளிவாசலை சுற்றி உள்ள அணைத்து தெருக்களிலும் ஜொலிக்கும் வண்ண விளக்குகளுடன் கடைகள் தோன்றி இருக்கும். ஹல்வா, காஜா விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதும்.
ஆனால் இந்த வருடமோ பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டு உள்ளன. ஊரை சுற்றி கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. கொரோனா அச்சம் காரணமாக திறந்திருக்கும் ஒன்றிரண்டு கடைகளிலும் பெரிய கூட்டம் இல்லை.
27-வது நோன்பு மட்டுமே லைலத்துல் கத்ர் இரவு என்பது போல மக்கள் புத்தாடை அணிந்து கொண்டாடுவதிலும் நமக்கு உடன்பாடு இல்லை. இருந்த போதும் காலம் காலமாக மக்கள் கூட்டத்தாலும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பள்ளிவாசல், இன்று ஒன்றும் இல்லாமல் வெறுமை நிரம்பிய பள்ளிவாசல்களை பார்க்கும்போது மனதிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத ஏக்கம் ஏற்படுவதை உணர முடிகிறது.