


யூனியன் பிரதேசமான புதுவை கனிம வளம் இல்லாத பகுதியாகும். இதனால் 20 ஆண்டிற்கு முன்பு வரை புதுவை சந்தை மாநிலமாக இருந்து வந்தது. கார், மோட்டார் சைக்கிள், எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், டயர், மது பானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வரி குறைவாக இருந்தது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வந்து தங்கி பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில் வாட் வரி, சமச்சீர் வரி ஆகியவற்றை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த பின்னர் அண்டை மாநிலங்களுக்கும், புதுவைக்கும் உள்ள பொருட்களின் விலை வித்தியாசம் வெகுவாக குறைந்தது. இதனால் புதுவையின் முகம் மாற தொடங்கியது. அன்றிலிருந்து சுற்றுலா நகரமாக புதுவை மாற தொடங்கியது. இதற்கேற்ப அரசும் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அளித்தது.
இதனால் புதுவை நகரம் முழுவதும் விடுதிகளின் எண்ணிக்கை பெருகியது. சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருக தொடங்கியது. பன்னாட்டு அளவிலும், அகில இந்திய அளவிலும் செயல்படக்கூடிய உணவகங்கள், விடுதிகளும் புதுவைக்கு வர தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. திருவிழாக்கள், வார இறுதி நாட்கள், புத்தாண்டு ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.
புதுவையில் பல்வேறு தரப்பு மக்களும் தங்குவதற்கு வசதியாக பட்ஜெட் ஓட்டல் முதல் 5 நட்சத்திர விடுதிகள் வரை நூற்றுக்கணக்கானவை தற்போது இயங்கி வருகிறது. சிறிய உணவகம் முதல் உயர்ரக உணவகம் வரை நூற்றுக்கணக்கில் நகரத்தில் உள்ளது.
அரசும் சுற்றுலாத்துறை மூலம் படகு குழாம், விடுதிகளையும் நடத்தி வருகிறது. வார இறுதி நாட்களில் மட்டும் சுற்றுலாவை மேம்படுத்தி வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் விதமாக மாற்றவும் அரசு தீவிரம் காட்டி வந்தது.
இத்தகைய சூழலில் பேரடியாக கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே சீர்குலைந்துள்ளது. உலகளவில் உள்ள சுற்றுலா நகரங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதேபோல புதுவையிலும் சுற்றுலா முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேலாக புத்தாண்டு வரை சுற்றுலா எழுச்சி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவாகவே உள்ளது.
போக்குவரத்தை அனுமதித்தாலும் வெளி மாநிலத்திலிருந்து அத்தியாவசிய பணிகள் தவிர வேறு பணிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள, அதனை சார்ந்த தொழில்களை நடத்துவோறும், அதில் பணியாற்றுபவர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அரசு தற்போதே மாற்று திட்டங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். அதேநேரத்தில் வரும் காலத்தில் மீண்டும் புதுவை பாதுகாப்பான சுற்றுலா நகரம் என்ற நம்பிக்கையை சுற்றுலா பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்கள் இந்த பாதிப்பை தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறும் அபாயமும் உள்ளது.
எனவே நசிந்து போயுள்ள சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பு திட்டங்கள், சலுகைகளை வழங்கவும் அரசு முன்வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.