

சமூக ஊடகங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, மீம்ஸ் கலாசாரம் வேர்பிடித்து வளரத் தொடங்கிவிட்டது. மீம்ஸ் எனப்படும் பகடி செய்யும் சமூகம் ஒன்று உருவாகிப் பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் அடித்துத் துவைக்கத் தொடங்கிவிட்டது. பெரும் அரசியல்வாதியாகட்டும், திரையுலகப் பிரபலமாகட்டும், விளையாட்டு வீரராகட்டும், டி.வி. நிகழ்ச்சிகளில் எப்போதோ வந்து போனவராகட்டும், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு வைத்து ஊறப்போட்டு அடித்து, நொடிப்பொழுதில் எல்லோரையும் சிரிக்கவைப்பது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. ஒரு புகைப்பட மீம் போட்டு Tag that friend என அந்த குணாதிசயம் இருக்கும் ஒருத்தரைக் கலாய்க்கிறது நாம எல்லோருமே அன்றாடம் பார்க்கிற பகடி.
ஆமா… மீம்னா மெய்யாலுமே என்னாபா?.
தமிழில் நாம ‘உவமையணி’ கேள்விப்பட்டிருக்கோம். நாம் சொல்ல நினைக்கிற பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை (அர்த்தம்) இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுப்படுத்திக் கூறுவது. சொல்ல எடுத்துக்கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு, தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு தொடர்புபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணி. நாம் சினிமாக் காட்சிகளை வைத்துச் செய்கிற மீம்கள் இந்த வகைதான்.
ஒரு நிகழ்வுக்குப் பொருத்தமான வேறொரு நிகழ்வைக் காட்டி நடப்பைப் புரியவைக்கக் கூடியதாகவும், நகைச்சுவையைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கின்றன. எல்லா நாடுகளிலும் மீம் கலாசாரம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சிலவற்றைப் பார்த்ததுமே புன்னகைக்கத் தோன்றும். சில உன்னிப்பாகக் கவனித்தால்தான் அதில் இருக்கும் நகைச்சுவைத்தன்மை புரியும். இப்படி, ஒரு நகைச்சுவையான சம்பவத்தை ஒரே ஒரு புகைப்படத்தில் காட்டக் கூடியதாகவும் இந்த மீம்கள் இருக்கும். நாகரிக வளர்ச்சியால் எதையும் சுருங்கக் கேட்கும் பழக்கமும் இந்த மீம்களின் அசுர வளர்ச்சிக்கு ஒரு காரணம்.
நடப்பு நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல மீம் உருவாக்குவது ஒருவகை என்றால், ஏற்கெனவே வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் விஷயங்களையும் பகடி செய்து சிரிக்கவைப்பது இன்னொரு வகை. கடவுள், ஆதாமிடம் இந்தப் பழத்தைச் சாப்பிடக் கூடாது எனச் சொன்னதையும், ‘Adam had an other idea’ என மீம்ஸ் போடலாம். குறிப்பிட்ட ஒரு டெம்ப்ளேட்டை எடுத்துக்கொண்டு அதற்குப் பொருந்தும் பல நிகழ்வுகளையும் மீம்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எந்த வரையறைக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் வேற லெவலில் யோசித்து மீம் உருவாக்குபவர்களும் பெருகி வருகிறார்கள்.
கோட்டக்குப்பம் மீம்ஸ் குரூப்பின் தற்போதையா மீம்ஸ், கோட்டக்குப்பம் மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. கோட்டகுப்பதில் நடைபெறும் நிகழ்வுகளை நமதூர் மொழியில் சொல்வது தான் இவர்களின் சிறப்பு.
நீங்களும் இவர்களின் பக்கத்தை லைக் செய்து மீம்ஸ் பார்த்து ரசித்து மகிழவும். https://www.facebook.com/kottakuppam.memes
மீம் தயாரிப்பதற்கு பெரிய பிரம்மப் பிரயத்தனம் எல்லாம் தேவையில்லைதான். meme maker, quick meme, ட்ரோல் போன்ற தளங்களைப் பயன்படுத்தி எளிதாக உருவாக்கிவிடலாம். ஆனால், நீங்கள் உருவாக்கி வைரலாக்கும் மீம்ஸ்களால் பிரச்சனை ஆகாமல் பார்த்துக் கொஞ்சம் சூதானமா பண்ணுங்கப்பு..!