
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனைதில் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் ஏழை மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை கோவிட்19 மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதுவை, தமிழகம் மற்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களுக்கான கோவிட்19 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 6 ஆயிரம் பேரின் உமிழ் நீர் ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஜிப்மர் மருத்துவமனை கோவிட் மருத்துவமனையாக அறிவிக்கப்படதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 23 ஆம் முதல் தோல், எலும்பு முறிவு, கண், உளவியல், மற்றும் பல் மருத்துவத் துறைகளின் வெளிப்புற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.
ஜிப்மர் மீது புகார்
இச்சூழலில் இப்பிரிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர ஜிப்மரில் மறுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தன. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி தொகுதி எம்.பி. வைத்தியலிங்கம் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஜிப்மரில் முன்பதிவு
இந்நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து வந்த தொடர் புகாரையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு இன்றுமுதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413- 2298200 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தொலைபேசி அல்லது காணொலி மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குவார்கள்.

கெடுபிடிகளுடன் அனுமதி
மேலும் நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்தோருக்கு முன்னதாக நோய் தொற்று உள்ளதா? என பரிசோதித்த பிறகே குறிப்பிட்ட சிகிச்சை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய நடைமுறை பயனற்றது
ஜிப்மர் மருத்துவமனைக்கு பெரும்பாலும் ஏழை மக்களே அதிகளவு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் பலபேர் செல்போன் பயன்படுத்துவது கிடையாது. இத்தகைய சூழலில் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதும், முன்பதிவு உள்ளிட்ட ஜிப்மரின் புதிய நடைமுறைகளால் ஏழை மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்கப்போவதில்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.