
மாநிலங்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மத்திய அரசு மதிப்பளிக்குமா?
“தேசமே கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் அசாதாரண சூழலிலும் அதிகாரங்களை மத்தியில் குவிப்பதற்கான முன்னெடுப்புகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒருபகுதியாக, மின்சாரத்தில் மாநிலங்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பறிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது” என்று கொந்தளிக்கிறது தமிழகம்.
மின்சார (திருத்த) சட்டம் 2020 வரைவை ஏப்ரல் 17-ம் தேதி, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது மத்திய மின்சார அமைச்சகம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்தும், மின்பொறி யாளர்கள், மின்ஊழியர் சங்கங்கள் என பல திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சரி, இதில் என்ன பிரச்னைகள்?
ஏற்கெனவே மத்தியிலும், மாநிலங்களிலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் இருக்கின்றன. இந்தநிலையில், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கு இந்த வரைவு வழிவகை செய்கிறது. இதுதான் மிக ஆபத்து. இது நிறைவேற்றப்பட்டால், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மின்சாரம் விற்பனை செய்யலாம். இங்கே பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் ஏற்படுகிற தண்ணீர் பற்றாக்குறையையும் நிலக்கரி பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசையும் நாம் அனுபவிக்க வேண்டிவரும்.
மின்சாதனங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கலாம் என்கிறது இந்த வரைவு. அப்படியொரு நிலை வந்தால், மின்உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான சாதனங்களைத் தற்போது தயாரித்துக்கொண்டிருக்கும் பெல் (பாரத மிகுமின் நிறுவனம்) உள்ளிட்ட நிறுவனங்களின் நிலை கேள்விக்குறியாகும்.
குறுக்கு மானியம் என்கிற நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது. மின் உற்பத்திக்கு ஆகிற செலவு மின்கட்டணமாக மாறும்போது, அந்த முழுக்கட்டணத்தையும் ஏழை மக்களால் கொடுக்க முடியாது. ‘ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தின் ஒரு பகுதியை தொழிற்சாலைகள் ஏற்க வேண்டும்’ என்ற நியதி பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பெயர்தான் குறுக்கு மானியம். சமூகநீதி மற்றும் சமூக மேம்பாட்டின் அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டது. இதை நீக்க வேண்டும் என்பது பெருமுதலாளிகள் நீண்டகால கோரிக்கை. அவர்களின் கோரிக்கை இந்த வரைவில் இடம்பெற்றுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், வீடுகளுக்கான மின்கட்டணம் உயரும். அதேபோல, ‘விவசாயத்துக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் ரத்தாகும்’ என்று விவசாய சங்கங்கள் கொந்தளிக்கின்றன.
இதுகுறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ‘‘புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தவும், மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் புதிய சீரமைப்புகளைக் கொண்டுவந்து தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகள்தான் இவை. இதில் மாநில உரிமைகள் எங்குமே பறிக்கப்படவில்லை. மானியங்களையும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தையும் குறிப்பிட்டுத்தான், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக சிலர் விமர்சிக்கிறார்கள். மானியங்களும் இலவசங்களும் மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே, மாநில அரசுகள் பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக மானியத்தைச் செலுத்த வேண்டும் என்று வரைவில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்.
மாநிலங்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மத்திய அரசு மதிப்பளிக்குமா?
நன்றி : ஜூவி