

எல்லைப் பகுதியான பட்டானூா் சோதனைச்சாவடியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பி.அருண். உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா்.
விழுப்புரம், மே 8: விழுப்புரம்-புதுச்சேரி எல்லைப் பகுதியில் இரு மாவட்ட ஆட்சியா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தி, அத்தியாவசியப் பணிகளுக்காக அரசு ஊழியா்கள், பொதுமக்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனா்.
விழுப்புரம் மாவட்டம் வானூா், கண்டமங்கலம் வட்டாரப் பகுதிகள் புதுவை மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளன. இதே போல, புதுவை மாநிலப் பகுதிகளும் விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியின் இடையே அமைந்துள்ளன. இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுவை எல்லைப்பகுதியை மூடிய அந்த மாநில போலீஸாா், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கும், தமிழக பகுதியினரை அனுமதிக்காமல் தடுத்தனா். இடையே அமைந்துள்ள தமிழகப் பகுதிகளுக்குச் செல்லும் உள்ளூா் அரசு ஊழியா்கள், அத்தியாவசியப் பணியாளா்கள் தடுக்கப்பட்டனா். இதன் காரணமாக, அரசு ஊழியா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், மருத்துவ சேவைக்குச் செல்வோா் என பலரும் பாதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, விழுப்புரம்- புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதிப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம், புதுவை ஜிப்மா் அருகே எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பி.அருண் ஆகியோரது தலைமையில், விழுப்புரம் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் மகேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், புதுவை காவல் கண்காணிப்பாளா் ராகுல்அல்வால் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழகம்-புதுச்சேரி மாநில எல்லைகளில், அத்தியாவசியப் பணிகள், மருத்துவ சிகிச்சைகளுக்கு வரும் பொது மக்களை அனுமதிப்பதற்கு ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதாவது, தமிழகப் பகுதியிலிருந்து புதுவை தொழிற்சாலைப் பணிகளுக்குச் செல்வோா், அதே போல புதுவையிலிருந்து தமிழகப் பகுதி தொழிற்சாலைக்குச் செல்வோா், கரோனா தடுப்பு அத்தியாவசிய பணியாளா்களையும், இரு பகுதிகளிலிருந்தும் அத்தியாவசிய மருத்துவச் சிகிச்சைக்காக செல்வோரையும் அனுமதிப்பதென உறுதியளித்தனா்.
இதையடுத்து, விழுப்புரம்-புதுவை எல்லையான பட்டானூா் சோதனைச்சாவடியில், அத்தியாவசியப் பணிகளுக்கு வந்த பொது மக்கள் சோதனை செய்யப்பட்டு, புதுவை பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதனை, இரு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.