
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா நோய்க் கிருமி பரவுவதை தமிழகத்தில் தடுத்து நிறுத்த முடியவில்லை. நோய்த்தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடலூர், விழுப்புரத்தில் அதிக பாதிப்பு
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 138 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் கொயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பிய 76 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது.
நடுக்கத்தில் புதுச்சேரி அரசு
புதுச்சேரி மாநிலத்தில் கோயம்பேடு சென்று திரும்பிய 160 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என சோதனையில் தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் தற்போதைய நிலவரப்படி புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 6 பேர் மட்டுமே கொரோனா வைரசிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைவு என்றாலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் புதுச்சேரி அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
ஆபத்து
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எளிதாக புதுச்சேரிக்குள் நுழைந்துவிட முடியும் என்பதால், அவர்கள் மூலம் கொரோரோனோ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கன்னியகோவில், மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம், திருக்கனூர் உள்ளிட்ட தமிழக – புதுச்சேரி எல்லைகளை புதுச்சேரி அரசு சீல் வைத்து, தடுப்புகளை அமைத்து வெளிமாநில ஆட்கள் உள்ளே வராதபடி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
எல்லை கோடு அளந்து சீல்
இதனிடையே புதுச்சேரி அடுத்துள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் இரு மாநில அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் எல்லையை அளந்து சீல் வைத்துள்ளனர். மேலும் சாலையின் நடுவே இரும்பு தகரங்களை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள காரணத்தினால் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் புதுச்சேரி மாநிலத்துக்குள் வராமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லையை அளந்து சீல் வைக்கும் அளவிற்கு கொரோனா, இரு மாநில மக்களை பிரித்து தனது கோரமுகத்தை காட்டி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.