கட்டுரை படம் : சகோ. கலீமுல்லாஹ் @ லியாகத் அலி
வயிறு காய்கிறது.. வக்கற்றோர் வாழ வழி தெரியாது நிர்க்கதியாய் நிற்கிற போது, சோற்றுக்கு வழிபண்ணாத அரசு எல்லையோரத்தில் இருக்கும் ஒரு மதுக்கடையைத் திறப்பதற்காக இரு மாநில அதிகார இயந்திரங்களையும் முடுக்கிவிட்டு எல்லைப் பிரித்து, கர்மசிரத்தையாக பாகப் பிரிவினை செய்து வைக்கிறது.. பங்காளிச் சண்டையில் ஊர் பஞ்சாயத்து நாட்டாமை செய்து வைக்கும் கணக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிகார மையங்களை நோக்கி சில கேள்விகள்:
¶ கொரானா காலம் – அவசரநிலை காலம் என்பதற்காக எல்லைகளை முற்றிலுமாக அடைத்து விடலாம் என்பதற்கு என்ன சட்ட உரிமை இருக்கிறது?
¶ ஒரு நோயை காரணங்காட்டி எல்லைகளை மூடும் உரிமை உங்களுக்கு உண்டு என்றால், தனக்கு மிஞ்சினால் தான் உனக்கு தண்ணீர் என்று சொல்லும் கர்நாடகத்திடம் உரிமைக் குரல் எழுப்ப என்ன முகாந்திரம் இருக்கிறது உங்களுக்கு? வேறு எந்த அடிப்படையில் தேசிய ஒருமைப்பாடு குறித்துப் பேசப் போகிறீர்கள்..
¶ புதுவை பிரதேசம் அந்நிய ஆட்சியில் இருந்த போது, இந்திய யூனியனின் எல்லைப்புற கிராமங்கள் தானே உங்கள் விடுதலை வேள்வியின் பர்ணசாலைகளாக இருந்தன என்பதை அதற்குள் மறந்து விட்டீர்களா?
¶ பிரெஞ்சு அரசின் அடக்குமுறையில் தானிய தட்டுப்பாடு நிலவிய போது அருகாமை கிராமங்களிலிருந்து கடத்தி வரப்பட்ட தானியங்கள் தானே நிறைய குடும்பங்களுக்கு சோறூட்டியது?
¶ விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தோர் புதுவைக்குள் வந்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்றால் புதுவை சார்ந்தோர் இந்த மாவட்டங்களுக்குள் நுழைந்தால் நோய் குணமாகி விடுமா? புதுவையைச் சார்ந்தோர் எத்துணை பேர் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள்? எத்தனை பேருக்கு விவசாய நிலங்கள் இருக்கிறது? எத்தனை பேருக்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன? அவர்களெல்லாம் தமிழ்நாட்டில் நடமாடுவது மட்டும் நியாயமும் சுகாதாரமும் ஆகிவிடுமா?
¶ மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளை மறிப்பது தவறு என்பதை வலியுறுத்தி நியாயம் கேட்பவர்களிடம் இது உங்க இடம் இல்லை.. வருவாய்த்துறை பதிவேடுகளைப் பாருங்கள் என்று கதை படித்து சட்டப் பூர்வமாகவே குறுக்கு சுவரை அங்கீகரிப்பது தான் மக்கள் நல அரசின் பணியா?
¶ இதை சரியென ஏற்றுக் கொண்டால் நாளைக்கு யாரும் வீட்டைவிட்டு இறங்கி ரோட்டில் கால் வைக்க முடியாதே.. அந்த சாலை அவனுக்கு சொந்தமான இடமல்ல என்று சொன்னால் பொத்திக்கிட்டு போயிற வேண்டியதுதானா?
“வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளும் நிலையாம் எனும் நினைவா?”
என்று பாரதிதாசன் பாடிய புதுவையில் அதை செயல்முறையில் நடத்திக் காட்டுகிறது..