கோட்டகுப்பமும் கொரோனா தாக்குதலும்..


பதிவு : பேரா. Marx Anthonisamy
நன்றியுடன்..

புதுச்சேரி மாநிலத்தை ஒட்டி சென்னைச் சாலையில் உள்ள ஒரு பாரம்பரியமான ஊர் கோட்டகுப்பம். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் உள்ள அப்பகுதி தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. சென்னை செல்லும் பாதையில் புதுவையிலிருந்து சற்று தூரம் போனீர்களானால் கோட்டக்குப்பம் கடந்து மறுபடி கொஞ்ச தூரம் புதுச்சேரி மாநிலம் அமையும். புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் எல்லாம் உள்ளது அங்குதான். ஆக இப்படி புதுச்சேரி யூனியன் பகுதியால் உள்ளடக்கப்பட்ட தமிழ்நாட்டுப் பகுதி அது.

முழுக்க முழுக்க கோட்டகுப்பம் மக்களின் வணிகத் தொடர்புகள் முதலிய அனைத்தும் புதுச்சேரியுடன் தான் இருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கோட்டகுப்பம் மக்களின் வணிகத் தொடர்புகள் மூலம் பெரும்பயன் அடைபவர்கள் புதுச்சேரி வணிகர்களும் ஒரு வகையில் அந்த அரசும்தான். ஒரு யூனியன் மாநிலம் எனும் அளவிற்கு அதன் அருகாமை பயனைச் சிறிது கோட்டகுப்பம் மக்களும் அனுபவிக்கிறார்கள் தான். நான் சொல்ல வருவது பல்வேறு வகைகளிலும், பிள்ளைகள் படிப்பு உட்பட கோட்டகுப்பம் மக்களுக்கு எல்லாத் தொடர்புகளும் புதுச்சேரியுடன் தான்.

அப்படியான கோட்டகுப்பத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளதால் மொத்த ஊருமே இப்போது குவாரண்டைன் ஆக்கப்பட்டுள்ளது எனவும், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் கூட கோட்டகுப்பம் மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், நமது முஸ்லிம் நண்பர்கள் சில உதவிக் குழுக்களை அமைத்து அவசர மருந்துத் தேவைகள் முதலியவற்றைப் பூர்த்தி செய்வதாகவும் சென்ற மாதம் முகநூல்களில் செய்தி படித்தேன்.

தற்போது அங்கு நிலைமை எப்படி என அங்குள்ள எனது முஸ்லிம் நண்பர்கள் சிலரிடம் தற்போது பேசினேன். அவர்கள் சொன்ன செய்திகள் மிகவும் மனதை நோகடித்தன. எந்த அளவிற்கு முஸ்லிம் வெறுப்பு எல்லா மட்டங்களிலும் பரவி கிடக்கிறது என அறியும்போது மனம் கனத்தது.

முதலில் பேசிய நண்பரிடம் நான் கேட்ட கேள்வி:

“யாரோ சில முஸ்லிம்களுக்கு உங்கள் கோட்டகுப்பத்தில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளது எனப் பார்த்தேனே, அவர்கள் இப்போது எப்படி இருக்காங்க?”

அந்த நண்பர் சொன்ன பதில் அதிர்ச்சி அளித்தது. “”ஏதோ சிலர் எல்லாம் இல்லை. ஒரே ஒருத்தருக்கு அப்படிச் சொன்னாங்க. அதை ஒட்டி கோட்டக்குப்பத்தையே ஒரு தீவாக்கி புதுச்சேரியுடன் எங்களுக்கு இருந்த எல்லாத் தொடர்புகளையும் இல்லாமப் பண்ணுனாங்க. நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை…”

“அதுசரி அந்தக் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என்ன ஆனாங்க?”

“நிறைய பேரெல்லாம் பாதிக்கப்படலை. ஒரே ஒருத்தர்தான் பாதிக்கப்பட்டதா டெஸ்ட் ரிசல்ட் வந்துச்சுன்னாங்க. இரண்டாவது டெஸ்ட் பண்ணி அதை உறுதி செய்யணும். பண்ணுனாங்க. ஆனா இதுவரைக்கும் அந்த ரிசல்டைக் காண்பிக்கல..”

“அவர் இப்ப எப்படி இருக்கார்?”

“அவருக்கு ஒண்ணும் இல்லை. இப்ப வீட்லதான் நல்லா இருக்கார்”.

அந்த ஊர் முழுக்க குவாரன்டைன் பண்ணப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக வந்த செய்திகள் பற்றி இன்னொரு நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்னது:

“ஆமா ஊரையே குவாரண்டைன் பண்ணுனாங்க. ஒரு கவுன்சிலர் அதுல ரொம்ப உறுதியா இருந்தார். ஊரை மட்டுமில்ல. இந்த ஊருலேர்ந்து 80 சந்து வழிங்க உண்டு. எல்லாத்தையும் ப்ளாக் பண்ணினாங்க. பெற்றோர் மட்டும் ஒரு தெருவுல இருப்பாங்க. பிள்ளைகள் குடும்பத்தோட வேற தெருவுல இருப்பாங்க. தினம் சோறு கொண்டுபோய் புள்ளைங்கதான் கொடுக்கணும். அதுக்குக் கூட முடியாம போச்சு. கொஞ்ச நஞ்ச கஷ்டமா பட்டோம்…!”

“இன்னமும் நிலமை அப்படித்தானா?”

“இப்ப நாங்க சந்துகளுக்குள்ள போட்ட தடை எல்லாத்தையும் எடுத்துட்டோம். இருந்தாலும் குவாரன்டைன் கெடுபிடிகள் இருக்கு.. இந்த சந்துங்க வழியாத்தான் கம்யூனிஸ்ட் தலைவர் சுப்பையா தலைமறைவா இந்தக் கோட்டக்குப்பத்துல இருந்தாரு. ஒரு சந்துல போலீஸ் தேடி வந்தா இன்னொரு சந்து வழியா அழைச்சிட்டுப் போயி அவரைக் காப்பாத்தி இருக்கோம்..”

இன்னொரு நண்பர் கூறியது:

“அதிகாரிகள் மிக மோசமாக நடந்துகிட்டாங்க. என்ன கேட்டாலும் எரிச்சல் ஊட்டுற பதிலைத்தான் தந்தாங்க. குற்றவாளிகளைப்போலவே எங்களை அணுகினாங்க..”

‘அப்படி என்ன அதிகாரிகளுக்கு உங்க மேல கோவம்?”

“CAA எதிர்ப்புப் போராட்டத்தை எல்லாம் பெரிய அளவில் நடத்துனோம் இல்லியா. பிரமாண்டமான ஊர்வலம் எல்லாம் நடத்தினோமா… அதுல எரிச்சல்..”

நான் இதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்திருந்தேன். முதலில் பேசிய நண்பரிடம் மீண்டும் கேட்டபோது அவர் மிகவும் வருத்ததோடு பேசினார். ஏதோ தங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பது போலவே எல்லோரும் நடந்து கொண்டதாகச் சொன்னார்.

“என்ன அப்படிச் சொல்றீங்க. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ்காரராச்சே..?” என்றேன்.

“அவர் என்னங்க முதல்வர். அதிகாரம் இல்லாத முதல்வர். பாவம்..” என்றார். அந்த நண்பர் மேலும் சொன்னது:

“எங்க வீட்டில் ஒரு அம்மா தினமும் வேலை செய்ய வருவாங்க. வேலை செஞ்சு முடிச்சுட்டு நம்ம வீட்லயே இருந்து சாப்பிட்டுட்டுப் போவாங்க. திடீர்னு சாப்பாடு வேணாம்னு சொன்னாங்க. அவங்க இதுக்கு முன்னாடி எப்பவும் அப்படிச் சொன்னது இல்ல. ஏன்னு கேட்டோம். அவங்க தயங்கித் தயங்கி பேசுனாங்க,, ‘இல்லை.. முஸ்லிம்க வீட்ல சாப்பிட வேணான்னு சொன்னாங்க…’ எங்களுக்கு எப்புடி இருக்கும்”

சற்று நேரம் கழித்து அவர் சொன்னார். அவரது வயதான அப்பாவுக்கு திடீர்னு இரத்த அழுத்தம் ஏறி மயக்கம் போடத் தொடங்கியதாம். இன்னொரு வயதான அம்மையார் மனம் பிறழ்ந்து ஏதேதோ உளறத் தொடங்கினாராம். கொஞ்ச பேருக்குக் குடியுரிமை இல்லாம பண்ணி அவங்களை கொண்டுபோய் எங்கேயோ அடைச்சு வச்சிட்டதா புலம்பி அழத் தொடங்கிட்டாங்களாம்…

“முஸ்லிம்களை எதிர்காலத்தில் எப்படி நடத்துவது என்பதற்கு இந்தக் கொரோனா தாக்குதலை ஒரு ஒத்திகை யாக நடத்தியது போலத்தான் எங்களுக்கு இந்த அனுபவம் இருந்தது….”

மனம் கனக்க செல் பேசியை அணைத்துவிட்டு இதைத் தட்டிக் கொண்டு உள்ளேன்.

(பேராசிரியரின் அனுமதி இன்றி சில எழுத்துப் பிழைகளைத் திருத்தி பகிர்ந்துள்ளேன்..)

Liaqhat Ali Kaleemullah

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s