மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் எனக்கூறியும், இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்கட்சியான திமுக வலியுறுத்தியது. ஆனால் சபாநாயகர் தனபால் திமுகவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14 ம் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவமும், போலீசாரின் தடியடி சம்பவமும் நடைபெற்றது. வண்ணாரப்பைட்டை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
அந்த வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும், பு கோட்டக்குப்பத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மாபெரும் ஆட்டோ பேரணியில் ஈடுபட்டனர்.
பெரிய முதலியார்ச்சாவடியில் தொடங்கிய பேரணியானது புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர் அங்கு ஒன்று கூடிய அனைவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.