கோட்டக்குப்பத்தில் தொடர் மழை காரணமாக, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் திடீரென வருகை புரிந்து மீட்பு பணிகள் ஒத்திகை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை மட்டுமின்றி தொடர் மழையாக பெய்து வருகிறது. இதை யொட்டி, கோட்டக்குப்பம் பல்நோக்கு பாதுகாப்பு மையத்திற்கு அருகேவுள்ள, அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திற்கு, மாநில பேரிடர் 20 பேர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென வருகை புரிந்தனர்.அங்கு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் காலங்களில் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தும் மீட்பு பொருட்களான ஏர் போட், மரங்கள் விழுந்தால் அகற்றும் மோட்டார் இயந்திரம் உட்பட பல்வேறு உபகரணங்களை சோதனை செய்து, செயல்விளக்க ஒத்திகை செய்து காட்டினர்.இந்த செயல்விளக்கத்தை கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ஜெயக்குமார், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செல்வவிநாயகம், மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.இதையடுத்து, கலெக்டர் அண்ணாதுரை, கோட்டக்குப்பம் பல்நோக்கு பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்தார். கனமழையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராம மீனவர்கள் நேற்று இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லாதது குறிப்பிடத்தக்கது ஆகும்.