
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்துகொள்வதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நவம்பர் 29 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்துகொள்வதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நவம்பர் 29 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைவைத்துள்ள சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திட முதலமைச்ச எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெறுவதற்கான குடும்ப அட்டையாக நவம்பர் 26 ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் என்று முதலில் உத்தரவிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் உணவுப் பொருள் பொது விநியோகத் திட்டத்தில், 10,19,491 குடும்ப அட்டைதாரர்கள் சர்க்கரை மட்டும் வாங்கும் அட்டைகளை வைத்துள்ளனர். தற்போது எல்லாம் ஸ்மார்ட். கார்டுகளாக்கப்பட்டுள்ளன.
அதனால், இந்த கால அவகாசம் போதவில்லை என்று அட்டைதாரர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு அதற்கான கால அவகாசத்தை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அதனால், சர்க்கரை விருப்ப அட்டைதாரர்கள், அரிசி பெறக்கூடிய அட்டையாக மாற்ற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் கார்டை நகல் எடுத்து வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி பெறக்கூடிய அட்டையாக மாற்ற ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பது எப்படி?
ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, வலது ஓரத்தின் கீழே இருக்கும் ‘சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற’ என்று இருப்பதை கிளிக் செய்து அதற்குப் பிறகான வழிகாட்டுதல் மூலம் பதிவு செய்யலாம்.
மேலும், கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில், பேசிய முதல்வர் பழனிசாமி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தமிழக அரசு கடந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கியது.