கோட்டகுப்பம் அருகே புதுச்சேரி அரசின் சார்பாக ஐ ஏ எஸ் மற்றும் ஐபிஎஸ் வகுப்புக்களுக்கான அரங்கம்:-
புதுச்சேரியில் 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் பெருந்தலைவர் காமராஜருக்கு சிறப்பு செய்யும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல திட்டங் கள் அவரது பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின் றன. பள்ளி கல்வித்துறை வளாகத்திற்கு கூட பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட் டுள்ளது. இதனிடையே காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட அரசு முடிவு செய்தது.
இதற்காக கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோயில் அருகே 3.75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2007-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.14 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
பின்னர் 2009-ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமி நீக்கப்பட்டதையடுத்து, மணி மண்டபம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.
2011-ம் ஆண்டு மீண்டும் ரங்கசாமி முதல்வராக அமர்ந்த பிறகு நிதி பற்றாக்குறையால், மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. 2014-ல் ரூ.24 கோடி ஹட்கோ கடனுதவி பெற்று, மீண்டும் காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணிக்கு, இரண்டாம் கட்டமாக ரங்கசாமி அடிக் கல் நாட்டினார்.
இதில் 80 சதவீத நிதி ஹட்கோ, 20 சதவீத நிதி மாநில அரசு பங்களிப்பாகும்.
இந்த மணி மண்டபத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
மணி மண்டபத்தில் ஒரே நேரத்தில் 150 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரும் வகையில் ஆடிட்டோரியம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கின. பணிகள் வேகமாக நடந்தன. அதன் பின்னர், அரசியல் களம் மாற பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இப்படியாக கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன.
வைத்திலிங்கம், ரங்கசாமி, நாராயணசாமி என அடுத்தடுத்து 3 முதல்வர்களை கண்டபோதிலும் இப்பணி இன்னமும் நிறைவடையாமலேயே உள்ளது.
இதற்கிடையே ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தனித்தனியாக மணி மண்டபத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
தற்போது காமராஜர் மணிமண்டபத்தில் பெருமளவு பணிகள் நிறைவடைந்துள்ளன. தரைத் தளம் 4,417 சதுர மீட்டரிலும், முதல் தளம் 3,900 சதுர மீட்டரிலும் கட்டப்பட்டு, வெளிப்புறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மணிமண்டபத்தில் அருங்காட்சியம், காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், காமராஜருக்கு சிலை வைப்பது, தரையை அழகுப்படுத்துவது போன்ற வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு காமராஜர் மணி மண்டப பணிகளை விரைந்து முடித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காமராஜரின் மீது அன்பு கொண்டவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,‘‘ பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. நிதி பிரச்சினை ஏதும் இல்லை. இதுவரை 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது தரை போடுவது உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணி மண்டப பணிகள் அனைத்தையும் வரும் ஜனவரி மாதத்துக்குள் முடித்து விடுவோம்’’ என்றார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.