அரசியலில் பெரும்பங்கு வகிப்பவர்கள் ஆண்கள்தான். பெண்கள் அரசியலில் பங்குகொள்வது மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் வருகின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கான சதவீதம் 33 லிருந்து 50 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சியில் பல பெண்கள் மன்றத் தலைவராக பதவி வகித்து வந்தனர். அவர்கள் அனைவருமே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. காரணம் பெண்கள் பெரும்பாலும் வெளியே வருவது கிடையாது. அரசியல் என்னவென்றே தெரியாமல் இருக்கும் நிலையில் வாய்ப்பு கிடைக்கும்போது ஆண்களின் ஆலோசனைப்படி சில காலம் பணி செய்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் பெண்களை தன்னிச்சையாக முடிவு எடுக்க விடுவதில்லை.
பெண்களின் பின்னிருந்து அவர்களை இயக்குபவர்களாகவே உள்ளனர். இந்த நிலை மாறவேண்டும். இவ்வளவு காலமாக பெண்களுக்கான வாய்ப்பு குறைவாக இருந்ததனால் பெண்கள் அரசியலில் ஈடுபடாமல் இருந்தனர்.
இன்றும் தனித்துவமாக சுதந்திரமாக செயல்படும் பெண் உறுப்பினர்கள் மிகக்குறைவே, 5% கூட இருக்காது என்றே எண்ணுகின்றேன். இதற்கு முக்கிய காரணமாக பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபடாதது, இரண்டாவது வாக்களிக்கும் மக்கள் பெண் வேட்பாளர்களில் யாருக்கு தகுதி உள்ளது என்று பாராமல் அவர்களின் கணவரையோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் தகுதியையும்,வலிமையையும் பார்ப்பது தான் இன்றைக்கு உள்ளாட்சி மன்றங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போலி இட ஒதுக்கீட்டிற்கு காரணம்.
அரசியல் கட்சிகளும் உண்மையான எண்ணத்தோடு உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு அதிக அளவில் போட்டியிட வழி செய்ய வேண்டும், பெயருக்காகவும் கணக்கிற்காகவும் அரசியல்வாதிகளின் சகோதரி மனைவிக்கும் மகளுக்கும் போட்டியிட அனுமதியளிப்பதைவிட உண்மையிலேயெ சுதந்திரமாக இயங்கும் பெண்களுக்கு வாய்பளிக்க வேண்டும்.
கோட்டக்குப்பம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 10 வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் வார்டுகளில் விபரம் : 4,7,8,9,10,11,14,15,16,17. வரும் உள்ளாட்சி தேர்தலில் இது வரை பொதுவெளியில் மக்களுக்காக வெளிப்படையாக உண்மையாக உழைத்த பெண்களை மட்டுமே வேட்பாளர்களாக பொதுமக்கள் தேர்தெடுக்கவேண்டும்.