கோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-
கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் எதிரே மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு கோட்டக்குப்பம், சின்னமுதலியார் சாவடி, தந்திராயன்குப்பம், நடுக்குப்பம் உள்பட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மீன்கள் விற்பனை செய்து வருகின்றனர். விற்பனை முடிந்து மீதமுள்ள மீன்களை அங்கேயே பெரிய அளவிலான ஐஸ் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் நடுக்குப்பத்தை சேர்ந்த மீனவ பெண்கள் அஞ்சலை, சுந்தரி, கவுரி ஆகியோர் மீதமிருந்த மீன்களை 5 ஐஸ் பெட்டிகளில் வைத்துவிட்டு சென்றனர். நேற்று காலை மீன் விற்பனை செய்வதற்காக மார்க்கெட்டுக்கு வந்தனர். அப்போது 5 பெட்டிகளில் 2 பெட்டி மீன்கள் திருட்டு போயிருந்தது. மேலும் 3 பெட்டிகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த மீன்களும் திருடப்பட்டு இருந்தது. நள்ளிரவில் மீன் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் மீன்களை திருடிச்சென்றுள்ளனர். திருட்டுப்போன மீன்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவ பெண்கள், மர்மநபர்களை கைது செய்யக்கோரி கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியல் செய்ய திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து வந்து, மீனவ பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீன்களை திருடிச்சென்ற மர்மநபர்களை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மீனவ பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மீன் திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.