புதுச்சேரி சண்டே மார்க்கெட், வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டசபையில் நடந்த விவாதம்:அன்பழகன் எம்.எல்.ஏ.,: நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்படைகின்றனர். போக்குவரத்தை சீரமைக்க கலெக்டர் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடைபாதை ஆக்கிரமிப்புகள் பல இடங்களில் அகற்றப்பட்டது. ஆனால், அரசியல் குறுக்கீடு காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள், அதிகாரிகளை மிரட்டும் சூழல் உள்ளது. பல்வேறு அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் பெயரில் பலர் சாலைகளை ஆக்கிரமித்து வாடகை மற்றும் குத்தகைவிட்டு பணம் சம்பாதிக்கின்றனர்.எனவே, ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்தில் அரசு பாரபட்சம் காட்டாமல் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகளை மிரட்டினால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு போட வேண்டும் என்றார்.அதற்கு பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரியில் சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போன்று தினமும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு பகுதிகளில் நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்தை சரி செய்ய சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் கலெக்டரின் நடவடிக்கையை பாராட்டுகிறேன். இந்த நல்ல பணிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இப்படி, பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தி விட்டு ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துங்கள். குடும்பத்தோடு வாகனங்களில் செல்பவர்களை பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தாதீர்கள் என்றுதான் கூறினேன். அதற்காக, ஹெல்மெட் சட்டத்தை தடுப்பதாக என்மீது வழக்கு போடுகிறார்கள்.புதுச்சேரி சண்டே மார்க்கெட் நடப்பதால் அரசுக்கு எந்த வருமானமும் இல்லை, பட்டேல் சாலை துவங்கி, புஸ்சி வீதி வரையில் எம்.ஜி., ரோட்டில் கடை போடுகின்றனர். அங்கு கடை வைப்பவர்களும், வாங்குபவர்களும் வெளியூரில் இருந்து வருகின்றனர். கடை போடும் வியாபாரிகளுக்கு, அங்கு இடம் பிடித்துள்ளவர்கள் உள்வாடகைக்கு விட்டு சம்பாதிக்கின்றனர்.சண்டே மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் கடையை திறக்க முடியாமல் வியாபாரம் பாதிக்கிறது. எனவே, சண்டே மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் சண்டே மார்க்கெட் இடமாற்ற முடிவை கைவிட வலியுறுத்தி புதுச்சேரி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர்கள் கடையடைப்பு மற்றும் பிரமாண்ட பேரணி இன்று (08-09-2019) நடைபெற்றது…