நாடு முழுவதும், வாக்காளர் சரிபார்ப்பு திட்டம், செப்., 1 முதல், 30 வரை நடக்க உள்ளது. அக்., 15ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவம்பரில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
தவறில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்காக, வாக்காளர் சரிபார்ப்பு திட்டம், செப்., 1 முதல், 30 வரை நடக்க உள்ளது. இதுவரை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்கள் கொடுக்கும் விபரங்களை, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, அவற்றை சரிபார்ப்பர்.
திருத்தம்
இம்முறை, வாக்காளர்களே, தங்கள் பதிவுகளை சரிபார்த்து உறுதிப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செப்., மாதம் முழுவதும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி, புகைப்படம் மாற்றம் போன்றவற்றை, வாக்காளர்களே செய்யலாம்.தேசிய வாக்காளர் சேவை இணையதளமான, http://www.nvsp.in வழியே , செப்., 1 முதல் விண்ணப்பிக்கலாம். ‘மொபைல் ஆப்’ எனும் மொபைல் போன் செயலியும், அன்று துவக்கப்படும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மட்டும், ‘1950’ என்ற இலவச தொலைபேசி எண் வழியே, திருத்தங்கள் செய்யலாம்.அதன்பின், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்கள் செய்த திருத்தங்களை சரிபார்ப்பர். அப்போது, வாக்காளர் பெயர், பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவுமுறை, புகைப்படம், பாலினம் ஆகியவற்றை சரிபார்ப்பர்.
விடுபட்ட வாக்காளர்கள் உள்ளனரா; வருங்கால வாக்காளர்கள் உள்ளனரா என்றும், குடிபெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் உள்ளனரா என்றும் சரிபார்ப்பர். இணையதளம் மற்றும் மொபைல் ஆப் வழியே, வாக்காளர் பட்டிலியலில், திருத்தம் மேற்கொள்வோர், ஆதாரமாக, ஓட்டுனர் உரிமம், ‘ஆதார்’ அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த ஆவணங்களில் ஒன்றை, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும்.
சரிபார்ப்பு பணி முடிந்த பின், அக்., 15ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல், நவ., 30 வரை, வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கைகள் ஏற்கப்படும். பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில், நவ., 2, 3, 9 மற்றும் 10 தேதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். முகாமில் பெறப்படும் மனுக்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான திருத்தங்கள் செய்யப்படும். ஜனவரி மாதம், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இறுதி பட்டியல்
இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு கூறியதாவது: இணைய தளத்தில், படிவங்கள் ஆங்கிலத்தில் இருக்கும். வாக்காளர், பதிவு செய்த விபரங்கள் சரிதானா என்பதை, ஓட்டுச்சாவடி அலுவலர், நேரில் சரிபார்ப்பர். கம்ப்யூட்டர், மொபைல் போன் இல்லாதவர்கள், பொது சேவை மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில், திருத்தங்கள் செய்யலாம்.இதற்கு கட்டணமாக, 1 ரூபாய், ஜி.எஸ்.டி., வரியாக, 18 காசு வசூலிக்கப்படும். அக்., 15ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்; 2020 ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஒருங்கிணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட உள்ளது. இது, ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே பட்டியலாக இருக்கும்.திருத்தம், நீக்கல் விபரம், மூல வாக்காளர் பட்டியலில் காட்டப்படும். சேர்த்தல், நீக்கல், திருத்தங்களுக்கு, தனித்தனி பட்டியல் அச்சிடப் பட்டு, அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படாது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் நியமிக் கப்பட்ட, ஓட்டுச்சாவடி முகவர்கள், ஒரு நாளில் மொத்தமாக, 10 விண்ணப்ப படிவங்களை சமர்பிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலை, ஓட்டுச்சாவடி அலுவலரும், ஓட்டுச்சாவடி முகவர்களும் இணைந்து சரிபார்க்க வேண்டும்.