கோட்டக்குப்பம் காவல் துறை சார்பில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் நூலகத்தில் அமர்ந்து புத்தகம் வாசித்தார். விழாவில் அவர் பேசுகையில், மாணவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல், நல்வழியில் செல்ல நூலகங்கள் உறுதுணையாக இருக்கும்.
தற்போது நடக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களை ஆராய்ந்தால், அவை போதை பழக்கத்தால் ஏற்பட்டது என தெரியவருகிறது. எனவே பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. மாணவ பருவத்தில் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும். செல்போனை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்த கூடாது. காதல் விவகாரங்களில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக பெண்கள் 23 வயது வரை படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும். மாணவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். மாணவர்கள் கல்வி மட்டுமில்லாமல் பொதுஅறிவு புத்தகங்களை படிக்க வேண்டும். இப்பழக்கத்தின் மூலம் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லலாம் என்றார்.இதில் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பானுமதி ஜெயமூர்த்தி, திமுக தொண்டரணி அமைப்பாளர் சலீம், அதிமுக நகர செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் நன்றி கூறினார்.