புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆர்., சாலையில் கோட்டக்குப்பம் முதல் பிள்ளைச்சாவடி வரை உள்ள 7 கி.மீ., தூரம் சாலையை விரிவாக்கம் செய்ய டி.என்.ஆர்.சி., நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணியினை செய்து வருகிறது. இந்நிலையில், சின்ன கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் வரை சாலையின் இரு புறத்தில் வீடு மற்றும் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் சாலை பணிகள் பாதிப்படைந்தது.
இது குறித்து டி.என்.ஆர்.சி., நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் நேற்று கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது சிலர், தங்கள் நிலத்திற்கு டி.என்.ஆர்.சி., நிறுவனம் பணம் கொடுக்கவில்லை அதனால் நாங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் டி.என்.ஆர்.சி., நிறுவனம் சாலை விரிவாக்கம் செய்ய நிலத்தின் உரிமையாளர்களிடம் அதற்கான தொகையை கொடுத்து விட்டு கையகப்படுத்தியுள்ளது. நீங்கள் 15 ஆண்டுக்கு பின் இந்த இடத்தை ரிஜிஸ்டர் செய்து இருக்கின்றீர்கள். உங்களுக்கு முன் இந்த நிலத்தை வைத்து இருந்தவர்கள் நிலத்தை சாலை விரிவாக்கத்திற்காக கொடுத்துள்ளனர்.என அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் தெளிவுபடுத்திய பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.
Pic credit : Arun