சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட விஷயங்கள்கூட நம் நாட்டில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, சாலை விதிகளை மீறுவது, பொருள்களை அதிகவிலை வைத்து விற்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே சட்டப்படி தண்டனைக் குரிய குற்றங்கள்தான். இந்த வரிசையில் நம்மை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று கலப்படம். பால் முதல் மருந்துப் பொருள்கள் வரை இந்தக் கலப்படங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டப்படி குற்றம் என்பதையும் தாண்டி, கலப்படம், நுகர்வோரின் உடல்நலனுக்கே தீங்கு விளைவிக்கக்கூடியது என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.
இப்படி உணவுப்பொருள்களில் நடக்கும் கலப்படங்களைக் கண்டறிய, உணவியல் நிபுணர்களும் வேதியியல் நிபுணர்களும்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப்பொருள்களில் இருக்கும் கலப்படங்களை நாமே சோதித்துத் தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் தரமானவையா என்பதைக் கண்டறியவும் தரமற்ற உணவுப்பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்கவும் முடியும்.