நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 3,749 மி.மீ மழை கொட்டித்தீர்த்து, மழைக்கு 6 பேர் பலியாகியுள்ளனர். அவலாஞ்சி, ஊட்டி, குந்தா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
சாலையின் குறுக்கே விழுந்த மரம்:-
கடந்த 100 ஆண்டுகளில் தென்னிந்தியா கண்டிராத கன மழை நீலகிரியில் பெய்துவருகிறது. குறிப்பாக, அவலாஞ்சியில் 911 மி.மீ மழை பதிவானது. தென்னிந்தியாவில் பதிவான மழை அளவில் இதுவே அதிகபட்ச மழை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊட்டியில் சூழ்ந்துள்ள மழை வெள்ளம் :-
தொடர்ந்து 7-வது நாளாகப் பெய்துவரும் பெருமழை, நீலகிரியின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காய்கறித் தோட்டங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குந்தா, ஊட்டி, கூடலூர் பகுதி சாலைகளில் தொடர்ந்து மரங்கள் விழுவதும் அகற்றுவதும் தொடர்கிறது.
சாலை ஓரங்களில் மண்சரிவு ஏற்பட்டு, பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று, ஊட்டி இத்தலார் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்சுவற்றில் மண் சரிந்து விழுந்ததில், சென்னி என்பவர் மண் மூடி பலியானார். அதேபோல் நேற்று மாலை நஞ்சநாடு தோட்டக்கலைப் பண்ணையில் பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற சுசிலா,விமலா என்ற இரண்டு பெண்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டனர்.
மண் மூடி உயிரிழந்த சஞ்சு:-
ஊட்டி அனுமாபுரம் அருகே வீடு இடிந்து விழுந்ததில், அமுதா என்ற பெண்ணும் அவரது 11 வயது மகள் பாவனாவும் பலியாகினர். இன்று, எமரால்டு வேலி பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு என்பவர் உயிரிழந்தார்.
மண் சரிந்தும் ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 4 பெண்கள் 2 ஆண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த 2,400 பேர் மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் உள்ளன. அணைகளிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுவருகிறது.
மழை வெள்ளத்தில் உடமைகளை இழந்து தவிக்கும் மக்கள் :-
ஏற்கெனவே, மழையால் நீலகிரி முழுக்க வெள்ளக்காடக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து குந்தா,ஊட்டி, கூடலூர் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது.இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே, நீலகிரியில் கனமழைக்குப் பலியான குடும்பத்தினருக்கு, தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும், மீட்புப் பணியில் 66 ராணுவ வீரர்கள் உட்பட 491 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட 1704 பேர், 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்கவைப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.