புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 10 வகையான பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படுவதாக புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி அரசு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க பொதுமக்களின் கருத்துகளை பெற வரைவு அறிக்கையை 8- 2-2019 அன்று வெளியிட்டது.அதன்படி சுற்றுச்சூழல் அமைச்சர்
கந்தசாமி தலைமையில், பிளாஸ்டிக் வர்த்தகர் சங்கம்,ஜவுளி சங்கம் மற்றும் உணவு விடுதி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் 10 வகையான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தயாரித்தல்,எடுத்துச் செல்லுதல்,விற்பனை செய்தல்,சேகரித்த வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இத் தடையாணையை அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சிப்பரப்பில் மாசு கட்டுப்பாட்டு கழகம், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் ஆகியோர் நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் இந்த ஆணையை மீறுபவர்கள் சுற்றுச்சூழல் விதி 1986 – ன் படி தண்டிக்கப்படுவார்கள் என புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.