இனம், மதம், மொழிகளை கடந்து.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.. சபாஷ் லால்பேட்டை!


தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபமெடுத்து, பெண்கள் ஆங்காங்கே காலிக்குடங்களுடன் சாலைமறியல், குடிநீர் கேட்டு நடுரோட்டில் தர்ணா… இன்றைக்கு தண்ணீர் லாரி வரவில்லை, இதுபோன்ற செய்திகளிடையே ஒரு வியப்பு கலந்த மகிழ்ச்சிகரமான செய்தி நமது வாசகர் லால்பேட்டையாசிர் அரபாத் ஹசனிடமிருந்து வந்து சேர்ந்தது. அதனை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம். காட்டுமன்னார்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி லால்பேட்டை. அதிக அளவு இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என சிறப்பு பெற்ற இந்த ஊரில் முக்கிய தொழிலே வெற்றிலை சாகுபடி செய்வதுதான். ஆனால் ஒரு காலத்தில் குடிநீர்பஞ்சம், தட்டுப்பாடு, வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த லால்பேட்டை பகுதி மக்கள் தெரு தெருவாக குடங்களுடன் அலைந்து திரிந்ததுதான் மிச்சம்.

தற்காலிக தீர்வு

கடைசியில் தங்களுக்கான தீர்வை தாங்களே தேடி கொண்டார்கள். கூடி நின்று தீர சிந்தித்தார்கள். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வாசிகம்பிள்ளை, 1957 ஆம் ஆண்டு தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியாளர் குன் அஹமத் மற்றும் ஊராட்சி தலைவர் எஸ்.கே.காதிர்ஷா சாஹிப் ஆகியோர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு போகப்பட்டது. ஊராட்சி சார்பில் ஊருக்கு பொதுவான பகுதிகள் இரண்டு தேர்வு செய்து, அதில் நீர்த்தேக்க தொட்டியினை அமைத்து கொண்டனர். இது தற்காலிக தீர்வாகவே இருந்தாலும் அவர்களின் முதல் வெற்றி இதுவே.

விடிவு பிறந்தது

24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும், தண்ணீரை தேடி எங்குமே அலைய கூடாது என்றும் மாற்று வழியையும் யோசித்தனர். அதன்படி ஊரில் குளங்கள் ஒட்டியுள்ள 17 பள்ளிவாசல்களில் மின்மோட்டாரைக் கொண்டு தண்ணீர் நிரப்ப நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து, அந்தந்த பகுதி குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிவாசிகளின் பிரச்சினைக்கு விடிவு ஏற்பட்டது. இது அவர்களின் இரண்டாவது வெற்றி.

மதம்-இனம் கடந்த நிலை

ஆனால் அத்துடன் இவர்கள் நிற்கவில்லை. மொத்த பள்ளிவாசல்களில் உள்ள நீர்தேக்க தொட்டிகளில் உள்ள நீர் அனைத்து தரப்பினருக்கும் பயன்பட வேண்டும் என்ற அடுத்தக்கட்ட யோசனையில் நகர்ந்தனர். அதன்படி, பள்ளிகள், அலுவலகங்கள், வணிக நிலையங்கள், மருத்துவமனைகள் என அனைவருக்குமே தண்ணீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பள்ளிவாசல் நீரானது இனம், மதம், மொழிகளை கடந்து அனைத்து தரப்பினராலும் புழங்கப்பட்டு வருகிறது. இதற்காக குறைந்த கட்டணமாக மாதம் 100 முதல் 200 ரூபாய் வரை பெறப்படுகிறது. இது லால்பேட்டை மக்களின் மூன்றாவது வெற்றி.

சரியான திட்டமிடல் தேவை

குடிநீரை தேடி ஓடிக் கொண்டிருக்கும் கால்கள் சற்று நின்று யோசித்தால் தீர்வு கிடைக்கும் என்பதையும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதையும் நிரூபித்துவிட்டார்கள் லால்பேட்டை மக்கள். எனவே சரியான திட்டமிடுதலும் தொலைநோக்கு பார்வையும் இருந்தால் நீரிலும் புரட்சி செய்யலாம் என்பதுடன் ஜீவாதார பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என குடிநீருக்காக அவதியுறும் மக்கள் சிந்தித்து பார்ப்பது அவசியம். ஒற்றுமை என்ற வலிமையுடன் ஊர்கூடி நீர் எடுத்து மகிழும் இந்த லால்பேட்டை சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் நாம் சொல்லியே ஆக வேண்டும்.

 

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s