கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன கோட்டக்குப்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக சைடு வாய்க்கால் அமைத்து தரப்படவில்லை. இருப்பினும், ஊரின் முக்கிய தெருக்களில் மட்டும் சைடு வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த வாய்க்காலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நின்றது. இதனை சரி செய்ய வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்ைக வைத்தனர். இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சைடு வாய்க்கால்களில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, மாரியம்மன் கோயில் தெருவில் 2 இடங்களில் இருந்த அடைப்பையும் ஊழியர்கள் அகற்றியுள்ளனர். தொடர்ந்து, சாலையின் நடுவில் செல்லும் சைடு வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால், அதனை உடனே அகற்றும் வகையில் இரும்பு கிரில் போடப்பட்டது. இந்த இரும்பு கிரிலானது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இரும்பு கிரிலில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் தடுக்கி விழுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் பொதுக்கள் நலன் கருதி இரும்பு கிரிலை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நன்றி : தினகரன்