சின்ன கோட்டக்குப்பத்தில் திட்டமிடாமல் கட்டப்பட்ட வடிகால் வாய்க்கால் வழியாக கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம், கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் பகுதி உள்ளது. இங்கு 5 ஆயிரம் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் வழியாக கடலில் கலக்க வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் கழிவுநீர் செல்லும் வாய்க்காலை அடைத்து வீட்டு மனையாக பிரித்து விற்பனை செய்துவிட்டனர். இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் அப்பகுதியில் தேங்கி நின்றது. இதையடுத்து, சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நீண்ட காலமாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையேற்று, அப்பகுதியில் கழிவுநீர் செல்ல வடிகால் வாய்க்கால் கட்டி தரப்பட்டது. இந்த வாய்க்காலில் கழிவுநீர் செல்லும் வகையில் முறையாக அமைக்கப்படவில்லை.
குறிப்பாக, மாரியம்மன் கோயில் பகுதியில் கட்டப்பட்ட வடிகால் வாய்க்கால் மிகவும் தாழ்வாக இருக்கிறது. இதனால் அதில் கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்பதுடன் வீட்டுகளில் உள்ளேயும் புகுந்துள்ளது. இதேபோல் பல தெருக்களில் கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வரதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். இத்தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கழிவுநீர் செல்லும் வகையில் வாய்க்காலை முறையாக மாற்றி அமைப்பது கொடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் ஆகினர். இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் வரதன் கூறுகையில், வடிகால் வாய்க்கால் திட்டமிட்டு கட்டாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் மேலும் பாaதிப்பு ஏற்படும். தற்போது கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லையும் அதிகரிப்பதுடன் பல்வேறு நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது. தொடர்ந்து தேங்கி நிற்கும் கழிவுநீரால் பன்றி தொல்லையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி வடிக்கால் வாய்க்காலில் கழிவுநீர் செல்லும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.
நன்றி : தினகரன்