பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள வில்லேர்ஸ் சூர் மார்ன் (Villiers-sur-Marne) நகரில் தமிழக மற்றும் புதுவை காரைக்கால்லை சேர்ந்த ஏராளமான தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இளைஞர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள, கருத்து பரிமாறிக் கொள்ள ஒரு அமைப்பு வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் ஆலோசனை செய்து முறையாக தமிழ் முஸ்லிம் சங்கத்தை நிறுவினார்கள். யூனியன் இஸ்லாமிக் தே பிரான்செஸ் தி அஸி (Union Islamique Des Français De L’Asie) என்ற பெயரில் ஒரு சங்கத்தை அமைத்து அரசாங்க விதிமுறைப்படி சங்கத்தை பதிவு செய்தனர்.
தற்போது அஸோஸியேஷன் தமுள் முஸ்லீம் தி வில்லியே (Association Tamil Muslim Des Villiers) என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்கள்.
சங்கத்தின் உறுப்பினரகளால் புதிய பள்ளிவாசல் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழ் முஸ்லிம் சங்கத்தின் உறுப்பினர்களிடம் நிதியுதவி பெறப்பட்டு மஸ்ஜித் அல் இஹ்சான் (Mosquee Al-Ihsan) என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு வக்பு செய்யப்பட்டது.
பள்ளிவாசலில் தொழுகையில் தமிழில் சொற்பொழிவு நடைபெற்று வருவதோடு, மாணவர்களுக்கு திருக்குரான் மற்றும் இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்து பாடம் நடத்தபடுகிறது. பிரான்சில் பிறந்து வளரும் தமிழ்முஸ்லிம் குழந்தைகளுக்கு தங்கள் தாய் மொழி தமிழில் ஏழுத படிக்க வகுப்புக்கள் நடைபெறுவது இந்த பள்ளியின் சிறப்பு.
ரமலான் மாத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்கு தமிழக சுவையுடன் நோன்புக் கஞ்சி தினமும் சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. நோன்புக் கஞ்சியுடன் பேரிச்சம்பழம், தண்ணீர்,ஜூஸ், சமோசா, ரோல்,பப்ஸ், பழ வகைகள், ரோஸ் மில்க், உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. தமிழக சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சி ஏதோ தமிழகத்தில் இருப்பது போன்றதொரு உணர்வினை அனைவருக்கும் ஏற்படுத்தும்.
இனம், மொழி என்ற பேதமின்றி பிரான்ஸ், இந்தியர் , இலங்கையர், பாகிஸ்தானியர், அரபு நாட்டவர், பங்களாதேசைச் சேர்ந்தவர், ஆப்பிரிக்க நாட்டவர் என உலக நாட்டவர் அனைவரும் தமிழாக நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறப்பது உலக ஒற்றுமையினைப் பறைசாற்றும் நிகழ்வாக காணபடுகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தங்கள் வீட்டு விஷேசத்தை செய்வதைப்போல் ஈடுபாட்டோடு செய்து வருகின்றனர்.
பள்ளிவாசலின் தலைவராக புதுவையை சேர்ந்த முஹம்மத் பாரூக், செயலாளராக கோட்டக்குப்பம் அஷ்ரப் உமர் அத்தாப், பொருளாளராக காரைக்கால் ஷர்புதீன் ஆகியோர் திறம்பட செயலாற்றி வருகிறார்கள்.
மேலும் கோட்டக்குப்பம் மேச்சான் வீடு ஹாஜி ஜக்கரியா அணைத்து பணிகளையும் செய்துகொண்டு இந்த பள்ளியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார்.
மேலும் இந்த வருடம் லைலத்துல் கத்ர் அன்று ஹாட் பிரேட்ஸ் பிர்தவ்ஸ் அவர்கள் தொழுகைக்கு வந்திருந்த அணைத்து ஆண் பெண்களுக்கும் மட்டன் பிரியாணி பார்சல் வழங்கினார்.
இவ்வமைப்பின் சீரிய பணி சிறக்க பொதுமக்கள் சார்பில் வாழ்த்துவதில் கோட்டக்குப்பம் இணையத்தளம் மகிழ்ச்சி அடைகிறது.