How to ask information under RTI act? | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி?


கேள்வி கேட்பது சுலபம்பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா? பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 – RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும். 

ஆனால், நம்முடைய மனுமீது பொதுத் தகவல் அலுவலர் பதில் தரவில்லை என்பதற்காக நாம் அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. ‘நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன். இந்த மனுதாரரை என்னால் சமாளிக்கவே முடியவில்லை’ என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்தான் நம்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்.

விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். கையால் எழுதினால்கூடப் போதும். டைப் செய்து அனுப்புவது நம்முடைய நேரம், விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்துக்கொள்வது நல்லது.

நாம் தகவலைக் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுத் தகவல் அலுவலர் யார், நாம் அவருக்குத்தான் மனுவை அனுப்புகிறோமா என்பதைத் தயக்கம் காட்டாமல் பலமுறை உறுதி செய்துகொண்டு, பின் மனுவை அனுப்பலாம். இதனால், ‘அவர் வருவாரா, பதிலைத் தருவாரா’ என்று ஒரு மாத காலம் வரையில் காத்திருப்புப் பாடல் பாடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுத் தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால் நாம் தகவலைக் கேட்கும் மாவட்டத்தில் வருகிற மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பிவைக்கலாம். ‘அவர் வருவாரா’ என்ற பாடலைப் பாடாமல் மூச்சுக்காற்றை மிச்சப்படுத்தலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தபால் துறை அலுவலக அதிகாரிகளும் நம்முடைய மனுக்களை எங்கு அனுப்பிவைக்க வேண்டுமோ, அங்கே அனுப்பிவைப்பார்கள்.

‘திரு. திருவாடானை மெய்யகாத்தான் அவர்கள்’ என்று ஆரம்பித்து பின்னர் அந்த அதிகாரியின் பதவி, பொறுப்பைக் குறிப்பிடுவது எப்போதும் சரியாய் வராது. நாம் மனுவை அளிக்கும்போது திருவாடானை மெய்யகாத்தான் இடத்துக்கு, வேப்பம்பட்டி வேம்புலிங்கம் வந்திருக்கக் கூடும். அதிகாரிகள் மாறுவர், பதவி, பொறுப்பு, இடம் மாறுவதில்லை. ஆக, எப்போதுமே அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் பதவிப் பொறுப்பையும், குறிப்பிட்ட மாவட்டத்தையும் மட்டும் குறிப்பிடலாம்.

முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

இந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர், http://www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் போய், தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். பிரத்யேகமான எண்கள் இதற்காக வழங்கப்படும். இந்த எண்களைத் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.

30 நாட்களுக்கு மேலாகிவிட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும். நேரடியாக நம்முடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்திய சான்றான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை போன்றவைகள் உள்ளனவா என உறுதி செய்துகொள்ளுதல் அவசியம்.

பதிவு அஞ்சலுடனான (ரிஜிஸ்டர் போஸ்ட்) பதில் அட்டை (AD)-யில் உள்ள தபால் துறை முத்திரை, நமக்கான ஓர் அத்தாட்சி ஆகும். பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்துகொள்ள வேண்டும்.

கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்ப மனுவின் இறுதியில் தவறாமல் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.
http://www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. நாம் அனுப்பிய இடத்துக்கு, அந்த மனுக்கள் சென்று சேர்ந்ததற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

நாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்து மூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்திசெய்து, இதுவரை கிடைக்கப்பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.
இரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், மாநில தலைமை தகவல் ஆணையர், தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 2, தியாகராயர் சாலை, ஆலையம்மன் கோயில் அருகில், தேனாம்பேட்டை, சென்னை-600018 (அ) தபால் பெட்டி எண்: 6405, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு உரியவர். அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, பேக்ஸ்: 044-24357580, Email: sicnic.in Web: http://www.tnsic.gov.in.

மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, “CENTRAL INFORMATION COMMISSION, II floor, August Kranti Bhavan, Bhikaji Kama Place, NEW DELHI – 110 066 என்ற இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் என்றால், http://www.rtionline.gov.in/ என்ற தளத்தில் மத்திய அரசின்கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம்.
http://www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

Advertisements

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s