#savekottakuppam #StopHydrocarbonProject
#kottakuppam #savepondicherry
தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி!
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பல்வேறு எதிர்ப்புகளை மீறி விழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே தமிழக டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி நாகை மாவட்டம் தரங்கம்பாடி வரையுள்ள கிழக்கு கடற்கரை பகுதிகளை மூன்று மண்டலங்களாக பிரித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களை செயல்படுத்த வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியிருந்த நிலையில், மத்திய பாஜக அரசு தனது ஆட்சியின் இறுதி தருணத்தில் அவசரமாக இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பாஜகவுக்கு அதிகளவில் நன்கொடை அளித்த கார்ப்பரேட் நிறுவனங்களில் முதன்மையானதாக உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு கைமாறாகவே பாஜக அரசு அவசரமாக அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக செயல்படுத்தப்படும் 3 ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மண்டலங்களில் 2 மண்டலங்கள் தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மக்களின் கோபத்திற்கு ஆளான ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திவரும் வேதாந்தா குழுமத்திற்கு அளித்து, தமிழக மக்களுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு செயல்பட்டுள்ளது.
தமிழகத்தை குறிவைக்கும் இதுபோன்ற திட்டங்களால் தமிழகம் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் அதன் பாதிப்பு இன்னும் அதிகமாகிவிடும் அபாயம் ஏற்படும்.
புதுவை அரசு இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று கூறியுள்ள நிலையில் தமிழக அரசு மவுனம் காத்து வருகின்றது.
தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் இந்த திட்டத்தை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
மேலும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் பூதங்கள் தமிழக மக்களையும், விவசாயிகளை தொடர்ந்து மிரட்டி வருகின்றது. இதனை தடுக்கும் விதத்தில் தமிழக அரசு தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் இந்த திட்டம் தொடரும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.