
கோடை விடுமுறை ஆரம்பம் ஆகியாச்சு, குழைந்தைகள் பல சுட்டி செயல்கள் பண்ணுவார்கள் அதில் ஒன்று சுவர் சித்திரம். சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்ற பழமொழியை ஆசிரியர்கள், பெரியவர்கள், தந்தையார் என்று பல பேர் சொல்லியிருப்பார்கள். ஆனால், குழைந்தைகள் அதைச் செயல்படுத்திக் காட்டும்போதுதான் அந்தப் பழமொழியையே உணர முடிகிறது.

குழைந்தைகள் தனது ஓவியங்களைக் காகிதங்களில் வரைந்து அவற்றை வீட்டின் கதவுகளிலும், பீரோவிலும் ஒட்டுவது இப்போதைய பழக்கம். அவ்வப்போது சுவர்களிலும் வண்ணம் தீட்டுகிறார்கள்.
வாடகை வீட்டில் வசிக்கும் குழந்தைகள் சுவரில் கிறுக்கக் கூடாது என்பது இந்திய பீனல் கோடில் இன்னும் சேர்க்கப்படாத ஆனால், நடைமுறையில் இருக்கிற சட்டம். ஆனால், வீட்டோடு சேர்த்து மனிதத்துக்கும் சொந்தமாக இருக்கும் சில ‘மனித ஓனர்கள்’ குழந்தைகளின் கைவண்ணத்தில் தலையிடுவதில்லை. இன்னும் சில உத்தமர்கள் வாடகை வாங்க வரும்போது குழந்தைகளின் ஓவிய மழலை வண்ணத்தை மகிழ்ந்து ரசிப்பார்கள்.

காலையில் புறப்படும்போது சுவர் சுத்தமாக இருக்கும். மாலை வந்து பார்த்தால் அதில் கோடுகள், புள்ளிகள், கண்கள், மான்கள், பூக்கள் என்று சுவரெல்லாம் சோலையாகியிருக்கும். பென்சில், பேனா என வீட்டில் இருக்கும் எழுதுகோல்கள் எல்லாம் தூரிகைகளாகிவிடும்.
குழந்தைகள் சுவரில் எழுதும்போது இது வாடகை வீடா, சொந்த வீடா என்ற நினைப்பெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை. மழலை மனத்தின் படைப்பாற்றல் சுவர் கிறுக்கல்களிலிருந்தே தொடங்குகிறது. எப்படி மெல்ல மெல்ல ஒரு குழந்தை பேசத் தொடங்கும்போது ங்ஙா…. ம்மா…..ப்பா…த்தீ… என்று மொழியின் துகள்களைத் தூவுகிறதோ அவ்வாறே எழுதும்போதும் புள்ளிகள், சிறு கோடுகள் என்று எழுத்துத் துணுக்குகளைச் சுவர்களில் வரைகிறது.

மழலைகளைப் பேசவைத்து ரசிக்கிற அளவுக்கு எழுத வைத்து ரசிப்பது குறைவு என்றே நான் பார்த்த வரையில் கருதுகிறேன்.
குழந்தைகளின் மழலைப் பேச்சைத் தடுக்காத நாம், மழலை எழுத்தைத் தடுப்பதும், பென்சிலைப் பிடுங்கிப் போடுவதும், அதட்டுவதும் நல்லதல்ல. இன்று சுவரில் கிறுக்கும் குழந்தை கையெழுத்து பழகுகிறது… நாளை அது அழகியல் ஓவியமாகலாம், பொறியியல் வரைபடம் ஆகலாம். உலக வரைபடத்தைப் புதிதாக நிர்ணயிக்கலாம்.

விரல்களை பென்சில் மேல் குவித்து அதிலிருந்து கோடுகளையும், வரையறுக்கப்படாத இன்ன பிற வடிவங்களையும் குழந்தைகள் செதுக்கும்போது சுவர்களும் பேசுகின்றன.

சுவர்களுக்கும் காதிருக்கும் என்பது பெரிய மனிதர்களின் சந்தேக உலகம். ஆனால், சுவர்களுக்கும் வாயிருக்கும், அவற்றோடு பேசலாம் என்பது மழலைகளின் சந்தோஷ உலகம், அவற்றை ரசிப்பதே தனி சுகம். குழந்தைகள் ஊருக்குப் போயிருக்கும் போதும் சுவர்களைப் பார்த்தால் சுவர்கள் வழியே அவர்கள் பேசுவார்கள். இனிமேல் குழைந்தைகள் வரைந்தால் ரசிப்போம்.– ஆரா