
வாக்கு என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. மக்கள் ஆட்சியில் மக்கள்தான் தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 18 வயதான ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாக்குரிமையை அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தனை பேரும் முழுமையாகப் பயன்படுத்தினால்தான் சிறந்த முடிவைத் தேர்ந்தெடுக்க முடியும்.
வாக்குரிமை எளிதாக எல்லோருக்கும் கிடைத்து விடவில்லை. ஆரம்பக் காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. பிறகு படித்தவர்களுக்கு அந்த உரிமை கிடைத்தது.
அதற்குப் பிறகு ஆண்களுக்கு மட்டும் உரிமை வழங்கப்பட்டது. பல ஆண்டுகாலம் பெண்கள் போராட்டம் நடத்தி, தங்களின் இன்னுயிரைத் தந்து, தங்களுக்கான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் 1951-52-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 21 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1989, மார்ச் 28 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்களிக்கலாம் என்ற சட்டம் வந்தது. இவ்வளவு போராடிப் பெற்ற வாக்குரிமையை, நாம் மதிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி, நியாயமானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மறவாதீர் ஏப்ரல் 18, அனைத்து ஓட்டுரிமை இந்தியரின் கடமை…