பயமுறுத்தும் பழைய பகை… மறக்காத தொண்டர்கள் – பதறும் ராமதாஸ்! கைகொடுக்குமா விழுப்புரம் தொகுதி?


வேறுபாடுகளை மறந்து இரட்டை இலையும், மாம்பழமும் இணைந்தாலும்கூட இரு கட்சி களின் தொண்டர்களின் மத்தியில் எதிரெதிர் உணர்வுகள் நிலவுகின்றன. இந்தக் களநிலவரம் காரணமாக பா.ம.க தரப்பு கலக்கத்தில் உள்ளது. இதையொட்டி, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் சமீபகால உரையைக் கேட்டால், அவரே பதற்றத்தில் இருப்பதை உணரமுடிகிறது.

பா.ம.க-வை எதிர்த்துக் களமிறங்கி இருக்கும், தி.மு.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க., பா.ம.க இடையிலான பரம்பரைப் பகையை, பொருந்தாத, முரண்பாடான கூட்டணியை வாக்காளர்களுக்கு நினைவூட்டு வதுதான் மருத்துவரின் பதற்றத்துக்குக் காரணம் என்கின்றார்கள். அ.தி.மு.க – பா.ம.க இடையேயான விரோதம் பத்து ஆண்டுகளுக்கும் மேலானது. 2006 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, சி.வி.சண்முகத்தை ஒரு மர்ம கும்பல் கொலைசெய்ய முயன்றது. இந்தச் சம்பவத்தின்போது சண்முகத்தின் சகோதரர் சி.வி.பாபுவின் மைத்துனர் முருகானந்தம் கொல்லப்பட்டார். காரின் அடியில் படுத்துக் கொண்டதால், சண்முகம் தப்பித்தார். இதுதொடர்பாக ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏழு பேர்மீது வழக்கும் போடப்பட்டது. இப்போது இந்த வழக்கு சி.பி.ஐ வசம் இருக்கிறது.

இன்னொரு சம்பவம், 2011 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த மரக்காணம் கலவரம்… “மரக்காணம் கலவரத்துக்கு பா.. தான் பொறுப்பு, அக்கட்சியை தடைசெய்ய வேண்டும்” என்று சட்டமன்றத்திலேயே முழங்கினார் ஜெயலலிதா. திருச்சி சிறையிலிருந்த ராமதாஸை, அவரது உடல் நிலையைக் கருத்தில்கொண்டு விடுவிக்கவேண்டும் என்று பா.ம.க தரப்பில் இருந்து ஜெ-வுக்கு தூது அனுப்பப்பட்டது. அதனால், அவர் விடுவிக்கப் பட்டார். திருச்சி சிறையிலிருந்து மெலிந்த உடலுடனும் உள்ளடங்கிய கண்களுடனும் மருத்துவர் வெளிவந்ததை பா.ம.க-வினர் மறக்கவில்லை. கடைசிவரையில் ராமதாஸை ஜெயலலிதாவும் மன்னிக்கவே இல்லை.

ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் மோடியின் வற்புறுத்தலில் இப்போது பா.ம.க-வுடன், எடப்பாடி பழனிசாமி கைகோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அமைச்சர் சி.வி சண்முகத்தைச் சமாதானப்படுத்தி, தைலாபுரத்தில் கைநனைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், தலைவர்களுக்குள் ஏற்பட்ட பிணைப்பு இரு கட்சிகளின் தொண்டர் களுக்குள் இன்னும் ஏற்படவில்லை என்கிறார்கள். போதாக்குறைக்கு ராமதாஸ் முன்பு, அ.தி.மு.க அரசுக்கு எதிராகப் பேசியதை எல்லாம் இன்று ஸ்டாலினும், திருமாவளவனும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதை எதிர்கொள்ள முடியாமல் ராமதாஸ், ‘திருமாவளவனை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியதே நான்தான்… மு.க.ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கியதும் நான்தான்…” என்று இந்த இருவர் மீதும் பாய்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க வழக்கறிஞர் பிரிவுத் துணைச் செயலாளர் சீனிவாச ராவ், “அகில இந்திய அளவில் ராம்தாஸ் அத்வாலே, தொடங்கிய ‘தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா’ என்கிற அமைப்பின் தமிழக அமைப்பாளராக மலைச்சாமி இருந்தார். அந்த அமைப்பில் இணைந்த திருமாவளவன், மலைச்சாமியின் இறப்புக்குப்பிறகு அமைப்பாளர் பொறுப்பை ஏற்றார். இதன்பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் என அந்த அமைப்பு தனித்துச் செயல்படத் தொடங்கியது. மதுரையில் மட்டுமே அறிமுகப்பட்டிருந்த வி.சி.க அமைப்பு, திருமாவளவனின் நண்பராக இருந்த மு.பாண்டியராஜனின் விருப்பத்தின் பெயரில், அவரது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் கிராமத்தில் முதல் கூட்டத்தை நடத்தியது. வடமாவட்டத்தில் திருமாவளவன் கால்பதித்தது இவ்வாறு தானே தவிர, ராமதாஸ் அழைத்து வந்ததால் அல்ல. இன்று திருமாவளவனைத் தாக்கிப்பேசினால், மற்ற சமூகத்தினர், வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைத்து விடலாம் எனக் கணக்கிட்டு ராமதாஸ் செயல்படுகிறார். இன்று மக்கள் விழிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது’’ என்றார்.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “இன்றையச் சூழலில் அ.தி.மு.க வாக்குகளை பா.ம.க-வுக்கு மடைமாற்றுவது சவாலாக இருக்கிறது. ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்பதை மேடைக்கு மேடை அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால், எங்குமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பதை அன்புமணி கூறவில்லை. நமது உழைப்பில் வென்றுவிட்டு, நாளை நமக்கு எதிராகவே சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி களமிறங்குவாரோ என்கிற சந்தேகம் அ.தி.மு.க தொண்டர்களிடம் நிலவுகிறது’’ என்றார்.

பா.ம.க-வை அ.தி.மு.க.வினர் நம்பவில்லை என்பதற்கு அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியே ஓர் உதாரணம். அ.தி.மு.க – பா.ம.க கூட்டணியைப் பிடிக்காத, அவரவர் கட்சிக்காரர்களும், வன்னியர்களும் அன்புமணிக்கு எதிராக முஷ்டியை முறுக்கும் நிலையில், பா.ம.க வலுவாகவுள்ள தர்மபுரி தொகுதியே தொங்கலில் இருக்கிறது. இதைத் தடுக்க இதுவரை அ.தி.மு.க தரப்புக் களமிறங்கவில்லை என்பதுதான் களநிலவரம். பா.ம.க. போட்டியிடும் ஏழு தொகுதிகளும் இந்த நிலையில்தான் இருக்கின்றன.

– ந.பொன்குமரகுருபரன்  — (vikatan.com), first picture: The Economic Times

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s