விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியில் 14லட்சத்து 27 ஆயிரத்து 874 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 14 ஆயிரத்து, 211 ஆண்களும், 7லட்சத்து 13 ஆயிரத்து 480 பெண்களும், 183 இதர வாக்காளர்களும் உள்ளனர.
கடந்த 2014 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் 482704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட கோ.முத்தையன் 289337 வாக்குகள், தேமுதிக கூட்டணியில் போட்டியிட்ட கே.உமாசங்கர் 209663 வாக்குகள், காங்கிரஸ் வேட்பாளர் கே.ராணி 21461 வாக்குகள் பெற்றனர். நோட்டா 11440.

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதியில் வாக்காளர் பெற்ற வாக்குகள்:
- அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் 7209
- திமுக வேட்பாளர் கோ.முத்தையன் 4754
- தேமுதிகவேட்பாளர் கே.உமாசங்கர் 992
- காங்கிரஸ் வேட்பாளர் கே.ராணி 474

என்ன செய்தார் எம்பி: தொகுதியில் உள்ள பிரச்சினைகள்:
விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்தத் தொகுதியில் வருகின்றன. கரும்பு உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம்; நெல் விளைச்சலில் தஞ்சைக்கு அடுத்த இடம் என்று பெயரெடுத்துள்ள இந்தப் பகுதி, முழுக்க முழுக்க விவசாயிகள் நிறைந்தது. அதேசமயம், தேசிய அளவில் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று என மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.
நந்தன் கால்வாய்ப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் அன்னியூர் சிவா, ‘‘விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட காலக் கனவு, நந்தன் கால்வாய்த் திட்டம். 36 ஏரிகளுக்கு நீர் வரும் பாதையைச் சரிசெய்வதுதான் நந்தன் கால்வாய் திட்டம். இதன்மூலம் செஞ்சி, விக்கிரவாண்டி பாசனப் பகுதிகள் பயனடையும். அண்ணா காலத்திலிருந்து சொல்லப்படும் திட்டம் இது. இதற்காக மத்திய அரசின் மூலம் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இதற்கிடையில், கால்வாய்களின் புனரமைப்புக்காக மாநில அரசு ரூ.14.5 கோடி ஒதுக்கியிருக்கிறது. கரும்பு, நெல் விவசாயிகளுக்காக எந்தத் திட்டத்தையும் அவர் கொண்டுவராதது வேதனை’’ என்று வருத்தப்பட்டார்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குலாம் மொய்தீன், ‘‘விழுப்புரம் நகரத்தில் மேம்பாலம் கட்டும் பணி பல ஆண்டுகளாக நடக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம், அறிவித்ததுடன் கிடக்கிறது. திண்டிவனம் சாரம் அரசு நூற்பாலையை மீண்டும் செயல்படுத்துவதாகத் தேர்தல் நேரத்தில் அவர் சொன்னார். சிப்காட் தொழிற்பேட்டையைத் தொடங்கியதுடன் சரி. அங்கு எதுவுமே வரவில்லை. விழுப்புரம் ரயில்வே ஜங்ஷனில் இருந்த லோகோ ஷெட் இடம் சும்மா கிடக்கிறது. அங்கு, புதிய ரயில்வே திட்டங்களைக் கொண்டுவந்திருக்கலாம். ஒரு தமிழக அமைச்சர், இரண்டு எம்.பி-க்கள் விழுப்புரத்தில் இருந்தும் இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை’’ என்றார்.
கோட்டக்குப்பம் அதனை சுற்றியுள்ள பகுதிக்குகென்று எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் பண்ணவில்லை. கோட்டக்குப்பம், ஆரோவில், வானூர், பொம்பையார்பாளையம் பகுதி மக்கள் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் போன்ற எல்லாம் தேவைகளுக்கும் புதுச்சேரியை எதிர்பார்த்து உள்ளனர். கோட்டக்குப்பம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின்நிலைய, பாதாளசாக்கடை திட்டம்களுக்காக வெகு காலம் காத்துகிடக்கின்றனர்.

இந்த முறை ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., ப.ஜ.க., மற்றும் பா.ம.கவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எதிர்க்கட்சியான தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. போன்ற மற்ற கட்சிகளோடு பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.தி.மு.க,.மற்றும் தி.மு.கவுக்கு தனிப்பெரும்பான்மை வாக்குவங்கி உள்ளது. தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் தலா 3ல் இரு கட்சிகளும் வெற்றி பெற்று உள்ளது. வன்னியர்கள், தலித்துகள், மற்றும் இஸ்லாமியர்கள் ஓட்டு இந்த தொகுதியின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளது.