‘‘தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள சி-விஜில் செயலியில் பதிவாகும் புகாரின்மீது 5 நிமிடத்திற்குள் துரித நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வேலூர் கலெக்டர் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ‘சி-விஜில் (CVIGIL)’ என்ற புதிய செயலியைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. கேமரா வசதியுள்ள எந்த வகையான ஆண்ட்ராய்டு செல்போன் மற்றும் ஐபோனில், கூகுல் பிளே ஸ்டோர், ஐபோன் ஆப் ஸ்டோர் மூலம் இந்த செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுபற்றி வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தெரியவந்தால், இந்தச் செயலியைப் பயன்படுத்தி 2 நிமிட வீடியோக்களாக எடுத்து அனுப்பலாம். அடுத்த நிமிடமே, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ‘பீப்’ ஒலியுடன் தகவல் பரிமாறப்படும். புகார் பெறப்பட்ட 5 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பவம் உறுதியானால் வழக்குப்பதிவு செய்யப்படும்.
மக்கள் பதிவுசெய்யும் அனைத்து பதிவுகளுக்கும் அடையாள எண் வழங்கப்படுவதோடு, புகாரின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை 100 நிமிடங்களுக்குள் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. சி-விஜில் செயலியில் இடம், நாள், நேரம் பதிவு செய்யப்படுவதால், புகார்களின் உண்மைத் தன்மையை எளிதில் கண்டறிய முடியும். பொய்யான தகவல்கள்மூலம் திசை திருப்ப முடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.