
தமிழகத்தில் வரும் மார்ச் 10 ஆம் தேதி (நாளை) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஆனாலும், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை முற்றிலும் கைவிடாமல், இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது
அதன்படி, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 3-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அனைத்து மாநிலங்களும் முகாம் நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டன
இதற்கிடையே சில காரணங்களால் பிப்ரவரி 3-ஆம் தேதி நடப்பதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர் பிப்ரவரி 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் நிறுவ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், விமானநிலையங்களில் வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகானோர் சொட்டு மருந்து முகாம்களில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருவதால் கடந்த 15 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை தமிழகம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளது
மறவாதீர்! மறவாதீர்!!