குட் டச், பேட் டச்
அந்த பள்ளிக்கூடத்தில் `குட் டச்’, `பேட் டச்’ பற்றிய செமினார் நடந்துகொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு விழிப்புஉணர்வு அளிப்பதற்காக நடத்தப்பட்ட அந்த செமினாரில் கலந்துகொண்ட 7 வயதுச் சிறுமி, அதே பள்ளியில் வேலை பார்க்கிற ஒரு கிளார்க்கைக் குறிப்பிட்டு அவர் தன்னிடம் செமினாரில் சொன்னதுபோலவே நடந்துகொண்டதாகச் சொல்லியிருக்கிறார். உடனே காவல்துறை, அந்த நபரைக் கைது செய்து விசாரித்ததில், அந்தச் சிறுமிக்கு தினமும் சாக்லேட் கொடுத்து, தான் மிஸ்பிஹேவ் செய்து வந்ததாக கிளார்க் ஒத்துக் கொண்டிருக்கிறார். சத்தீஸ்கரில் நடந்த இந்தச் சம்பவம், குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லித் தருதல் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமக்கெல்லாம் புரிய வைத்திருக்கிறது.
இந்த நிலையில், பெற்றோர்கள் குட் டச், பேட் டச் என்கிற இரண்டு விழிப்புஉணர்வுகளுடன் சேர்த்து மூன்றாவதாக `சீக்ரெட் டச்’ என்கிற விஷயத்தையும் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். அதென்ன சீக்ரெட் டச்? விளக்கமாகச் சொல்கிறார் சமூக ஆர்வலர் கன்யா பாபு.
“குட் டச், பேட் டச் பற்றி கிளாஸ் எடுப்பவர்கள், `டிரெஸ் மூடியிருக்கிற உடம்போட பகுதிகளைத் தொட்டால் அது குட் டச், மூடாத பகுதிகளைத் தொட்டால் அது பேட் டச்னு சொல்லித் தர்றாங்க. ஆனா, அது தப்புங்கிறது என்னோட ஒப்பினியன். ஏன்னா, ஒரு குழந்தை ஸ்கர்ட் போடும், ஒரு குழந்தை ஃபுல் பேன்ட் போடும். ஒரு பிள்ளை ஃபுல் ஸ்லீவ் டிரெஸ் போடும், இன்னொண்ணு ஸ்லீவ் லெஸ் போடும். அதனால, இத்தனை நாளாக நாம சொல்லிக் கொடுத்துட்டு இருந்த ரெண்டு `டச்’கள் மட்டும் போதாது. அதோடு மூணாவதா சீக்ரெட் டச்சையும் சொல்லித் தரணும். கன்னத்துக்குக் கீழே தாடையில், கழுத்துக்குப் பின்னால், உள்ளங்கைக்கு மேலே இருக்கிற பகுதியில் கூச்சம் வருகிற மாதிரி ஒருத்தர் உங்க குழந்தையை அடிக்கடி தொடுகிறார் அல்லது வருடி விடுகிறார் என்றால், அந்த நபர் உங்க குழந்தைகிட்ட தப்பா நடக்க முயற்சி செய்கிறார்னு அர்த்தம். கன்னம், கழுத்து, உள்ளங்கையெல்லாம் அந்தரங்கமான பார்ட்ஸ் இல்லையேன்னு நினைச்சி ஏமாந்துடாதீங்க. நான் மேலே சொன்ன இடங்கள்ல `அந்த அங்கிள் தொடுறார் மம்மி’னு உங்க குழந்தை சொன்னா அதை ஒரு ரெட் அலர்ட்டா எடுத்துக்கோங்க.
வீட்டுக்கு வர்ற கெஸ்ட்களுக்குக் குழந்தையை `கிஸ் கொடு’ன்னு பழக்கப்படுத்தாதீங்க. கெஸ்ட் தவறான நபராக இருக்கிறபட்சத்தில், நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையை முத்தம் கொடுக்க வற்புறுத்தலாம்.
நீங்க அடிக்கடி போகிற ஒரு வீட்டுக்கு திடீர்னு உங்க குழந்தை வர மாட்டேன்னு அழுதா, அதையும் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கோங்க. தினமும் ஸ்கூல் விட்டு வந்த பிள்ளையிடம் கிளாஸில் மிஸ் என்ன பாடம் நடத்தினாங்க, லன்ச் சரியா சாப்பிட்டியான்னு கேட்கிற மாதிரி, `அம்மா தொடக் கூடாதுன்னு சொன்ன இடங்களில் யாராவது தொட்டாங்களா‘ன்னு கேளுங்க. அப்படிக் கேட்கிறப்போ அதைப் பெரிய விஷயம் போல காட்டிக்கிட்டீங்கன்னா, குழந்தைகள் பயந்து போய் உண்மையைச் சொல்லாது. அதனால், இயல்பா கேளுங்க. இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெரிந்தாலும், நமக்கு வேறு வழியில்லை. நான் பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் தொடர்பான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபோகும்போதெல்லாம், `இதைப் பற்றிக் குழந்தைகளிடமும் பொது வெளியிலும் நாம் பேசப் பேசதான் சைல்டு அப்யூஸ் படிப்படியாகக் குறையும்’னு சொல்லுவேன். ஸோ, குழந்தைகளோட பாதுகாப்பைப் பற்றி நிறைய பேசுவோம். தப்புப் பண்றவங்களுக்கு பயத்தை உண்டு பண்ணுவோம். கள்ளனைவிட காப்பான்களை பலமாக்குவோம்” என்று முடித்தார் கன்யா பாபு.