படங்கள் : S. அப்துல் மாலிக்
சென்னை மெட்ரோ திட்டம்
சென்னையில் 45.1 கி.மீ. தூரத்திற்கான முதல் வழித்தட திட்டம் முடிந்த நிலையில் கட்டணம் குறைக்கப்படாததால் இந்த திட்டம் ஏழைகளுக்கு பயன் தருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விரைவான சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் கடந்த 2009ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் 10 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன்பிறகு படிப்படியாக மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்து 35 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தற்போது செயல்படுகிறது. இந்தநிலையில், முதல் வழித்தட திட்டத்தின் இறுதிகட்டமான வண்ணாரப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ் வரையிலான 10 கி.மீட்டர் தூரத்திலான சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார் .
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டாலும் குறையாத கட்டணத்தால் மெட்ரோ ரயில் சேவையானது இன்னும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. சென்னையில் புறநகர் ரயில்கள் மூலம் தினந் தோறும் சுமார் 4.5 லட்சம் பேர் வரையில் பயணம் செய்து வருகின்றனர். இதேபோல், மாநகர பேருந்துகளில் தினமும் சராசரியாக 45 லட்சம் பேர் வரையிலும் பயணம் செய்கின்றனர். ஆனால், மெட்ரோ ரயில்களில் தினந்தோறும் சுமார் 40 முதல் 50 ஆயிரம் பேர் வரையில் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் சேவை என்பது மக்களின் அன்றாட பயணம் என்பதை விடுத்து அவசர கால பயணமாகவே உள்ளது.
மெட்ரோ ரயில் சேவை கட்டணம் ₹60
பெரும்பாலான மக்களிடம் மெட்ரோ ரயில் சேவை இன்னமும் சென்றடையாததற்கு முக்கிய காரணம் அதிகபட்ச கட்டணம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆரம்ப கட்டணம் ₹10ல் இருந்து அதிகபட்ச கட்டணம் ₹60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை தவிர்த்து வருகின்றனர். சென்னைக்கு முன்பாகவே கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றது. ஆனால், சென்னையை விட மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டணம் குறைவாகவே வசூல் செய்யப்படுகிறது. குறிப்பாக 190 கிலோ மீட்டரில் 134 நிலையங்களை கொண்ட டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆரம்ப கட்டணம் ₹10ல் இருந்து அதிகபட்ச கட்டணம் ₹50 வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. நாட்டின் தலைநகர், அதுவும் விலைவாசி அதிகமாக உள்ள நகரிலேயே குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவில் குறைந்த கட்டணமாக ₹5ம், அதிகபட்சமாக ₹25ம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சென்னையில்தான் ₹10 முதல் ₹50 வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.ஒரு சேவை தொடங்கப்படும் போது அது அடித்தட்டு மக்களுக்கு பயணளிக்க கூடிய வகையில் இருக்குமா என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு தான் அந்த சேவையை அரசு தொடங்கும். ஆனால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பொறுத்தவரையில் கூலித்தொழிலாளிகள், வியாபாரிகள், சிறு,குறு வணிகர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இன்னும் எட்டாக்கணியாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் கட்டணத்தை குறைத்து விட்டு படிப்படியாக ஏற்றினால் கூட ஒன்றும் தெரியாது. ஆனால் அறிவிக்கும்போதே அதிக கட்டணத்துடன் வசூலித்தால், எப்படி என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
பலமுறை கட்டணத்தை முறைக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் கட்டணத்தை குறைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்வரவில்லை. மெட்ரோ ரயில் சேவை முழுமை அடையும் போது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணடைவார்கள் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது 45 கி.மீட்டர் வரையில் சேவை முழுமையடைந்துள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் கட்டுபடியாகும் கட்டணத்தில் சேவையை அளித்தால் மட்டுமே மெட்ரோ ரயில் நிர்வாகம் தன்னுடைய இலக்கை அடைய முடியும். மேலும், மெட்ரோ ரயில் திட்டங்களில் பெருந்தொகையை முதலீடு செய்துள்ளோம் என்பதற்காக அந்த சுமையை பயணிகள் மீது ஏற்றிவைக்கக்கூடாது என்பதே பொதுமக்களின் எண்ணம். மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்காததால் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணிக்க வேண்டிய மெட்ரோ ரயிலில் கடந்த 2016-17ம் ஆண்டில் சராசரியாக 10,964 பேரும், 2017-18ம் ஆண்டில் சராசரியாக 23,307 பேரும் பயணம் செய்துள்ளனர். தற்போது இது சற்று அதிகரித்து 40 முதல் 50 ஆயிரமாக உள்ளது. முதல் வழித்தட திட்டமே இன்னும் முழுமையாக வெற்றியடையாத நிலையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு செயல்படுத்த நினைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எப்போது கட்டணம் குறைக்கப்படுகிறதோ அப்போது தான் மெட்ரோ ரயில் திட்டம் பாமர மக்களுக்கும் எட்டும் கணியாக அமையும்.