Follow up :- மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தடை நிறுத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதித்த மாவட்ட உரிமையியல் நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொரட்டாண்டி சுங்கச்சாவடி
விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி கிராமத்தில் சாலை பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்ய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மொரட்டாண்டி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி, விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, தேர்க்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் வானூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் “விதிகளை மீறி செயல்பட்டு வரும் மொரட்டாண்டி சுங்கச்சாவடியை தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை பிப்ரவரி 7ம் தேதி (வியாழக்கிழமை) மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் விசாரித்த போது, வரும் 20ஆம் தேதி வரை சுங்கசாவடிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சுங்கசாவடிக்கு தடை விதித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சிவாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், “சுங்கசாவடிக்கு தடை விதித்த உத்தரவால், நெடுஞ்சாலைத்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கீழமை நீதிமன்றம் சரிவர விசாரிக்காமல், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது” என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, சுங்கச் சாவடிக்கு தடை விதித்த வானூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.