திருச்சி இஜ்திமா மாநாடு நிறைவு…
இறுதி நாளில், டெல்லியில் உள்ள தப்லீஃக் இயக்கத்தின் அமீர் ஹஜ்ரத் ஜீசஆத் மௌலானா சிறப்பு வழிபாடு நடத்தினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.
உலக அமைதிக்காக வழிபாடு :-
உலக அமைதிக்காவும், சமய நல்லிணக்கத்திற்கும், உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் எவ்வித பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறப்பு துஆ ஓதினார். மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறந்த முறையில் உணவு வழங்கப்பட்டது. உணவு தயார் செய்வதற்கு தேவையான சமையல் பொருட்கள் வைப்பதற்கு தனியாக இடம் அமைத்து, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டு ஏற்பாடுகள் :-
மாநாட்டில் பங்கேற்றுள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. அவசர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.
போக்குவரத்து சீரமைப்பில் இளைஞர்கள் :-
மாநாட்டு திடலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களை முறைப் படுத்தி, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கி நிறுத்தி வைக்கப்பட்டன. வாகனங்களை முறைப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபட்டனர்.
தினமும் சொற்பொழிவுகள் :-
மாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், வணிகத்தில் நேர்மை என பல தலைப்புகளில் தினமும் சொற்பொழிவு நடைபெற்றது.
தொழுகைக்கு ஏற்பாடு :-
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினர். இதேபோல பஜ்ர், லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய 5 வேளை தொழுகையும் மாநாடு திடலில் நடைபெற்றது.
பேருந்து வசதி :-
மாநாட்டில் கலந்து கொள்ள வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் இனாம் குளத்தூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. மாநாட்டையொட்டி திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.வரதராஜூ தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
10 லட்சம் பேர் பங்கேற்பு :-
இறுதி நாளான திங்கட்கிழமை மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. அதில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இறுதி நாளான மதியம் டெல்லியில் உள்ள தப்லீஃக் இயக்கத்தின் அமீர் ஹஜ்ரத் ஜீ ச ஆத் மௌலானா கலந்து கொண்டார். உலக அமைதிக்காவும் மற்றும் சமய நல்லிணக்கத்திற்கும், உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் எவ்வித பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறப்பு து ஆ ஓதினார். பின்னர் மாநாடு நிறைவு பெற்றது.