ஆரோபீச்சில் உள்ள சிறுவர் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படுமா?
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரோ பீச் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். புதுவை ஒட்டிய தமிழக பகுதியாக இது விளங்குவதால் புதுவைக்கு வரும் பலரும் இப்பகுதிக்கு சென்று வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கோட்டக்குப்பத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். குறிப்பாக இப்பகுதியில் உள்ள ஆரோ பீச் அனைவரையும் கவர்வதாக உள்ளது. புதுச்சேரியில் கடற்கரையில் கற்பாறைகள் கொட்டப்பட்டிருப்பதால் கடலில் இறங்கி குளிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும் இதில் குளிப்பது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக உள்ளது . இதனால் பலரும் கோட்டக்குப்பம் அருகே உள்ள ஆரோ பீச்சிற்கு சென்று வருகிறார்கள். சில வெளிநாட்டு பயணிகள் இப்பகுதியில் சூரிய குளியல் எடுத்து வருகின்றனர். மேலும் சிலர் இங்கு குடும்பத்துடன் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து செல்கிறார்கள். இதனால் தற்போது இந்த பகுதி ஒரு சுற்றுலா பகுதியாக விளங்கி வருகிறது.இந்நிலையில் இப்பகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இது பலருக்கு பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் இப்பூங்கா கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் சேதம் அடைந்தது. தற்போது போதிய பராமரிப்பின்றி பூங்கா முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும், விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எங்குமே பூங்காக்கள் இல்லை. இதனால் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லவும், குழந்தைகள் விளையாடவும் வசதியில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே வேறு சில இடங்களிலும் விளையாட்டு உபகரணம், நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் பூங்கா அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.