கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராமங்களில், போலீசார் மூலம் புகார் பெட்டி அமைக்கப்பட்டது.கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், கிராமங்களில் போலீசார் மூலம் புகார் பெட்டிகள் அமைக்க, விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் துவக்கமாக, பெரிய முதலியார்சாவடி நியாய விலை கடையில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமை தாங்கி நேற்று திறந்து வைத்தார். விழாவில், இன்ஸ்பெக்டர் திருமணி, சப் இன்ஸ்பெக்டர் அருள்செல்வன், தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதேபோல், சின்ன முதலியார்சாவடி, கோட்டக்குப்பம், சின்ன கோட்டக்குப்பம், கீழ் புத்துப்பட்டு, மாத்துார், வாழப்பட்டாம்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டிகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.இந்த புகார் பெட்டியில், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஸ்டேஷனின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டுள்ளன. புகார் பெட்டிகளை கண்காணிக்க மட்டும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், புகார் பெட்டியில் வரும் மனுக்கள் குறித்து உயரதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.