சென்னை புதுவை ECR இன் மற்றொரு 82 கி.மீ. நீட்டிக்கப்பட உள்ளது
கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கத் திட்ட நிலம் கையகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மரக்காணம் பகுதி மக்கள், 5 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.சென்னை-புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலை (332ஏ) விரிவாக்கத் திட்டத்தை மத்திய அரசு நெடுஞ்சாலைத் துறை செயல்படுத்த உள்ளது.தற்போது, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையிலான சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளனர்.இதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம், ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, அனுமந்தை, செட்டிக்குப்பம், கீழ்பேட்டை, கூனிமேடு, பனிச்சமேடு உள்ளிட்ட கிராமங்களில், கிழக்கு கடற்கரைச் சாலையோரம் உள்ள நிலங்களை வருவாய்த் துறையினர் அளவீடு செய்து வருகின்றனர்.இந்தத் திட்டத்துக்காக, மரக்காணம் பகுதியில் 180 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மரக்காணம், அனுமந்தை பகுதிகளைச் சேர்ந்த ஜி.பாஸ்கர், என்.சுகுமாரன், எஸ்.ஆவணி, எஸ்.சந்திரன் உள்ளிட்ட நில உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்துக் கூறியதாவது:மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியைச் சார்ந்து வாழ்ந்து வருகிறோம். அரசின் சாலை விரிவாக்கத் திட்டத்தால், வாழ்வாதாரமும், எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமந்தை கிராமத்திலுள்ள வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், உணவகங்கள், வீட்டு மனைகள், விளைநிலங்கள் என அனைத்தும் கையகப்படுத்தப்படுகிறது.அனுமந்தை கிராமம், சுற்றுப்புற 25 கிராமங்களுக்கு நுழைவு வாயிலாக உள்ளது. சுங்கச்சாவடி, கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தம், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் உள்ள வளர்ச்சி பெற்ற பகுதியாகும். மீன்பிடி தொழில், தென்னை சாகுபடி சிறந்து விளங்குகிறது.அதனால், இங்குள்ள விளைநிலங்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது.எங்களின் நிலங்களை எதிர்கால வாழ்வாதாரத்துக்காக வைத்துள்ளோம். நிலம் கையகத்துக்கு அண்மையில் சாலையோரம் 30 மீட்டர் அளவுக்கு அளவீடு செய்த நிலையில், தற்போது நிலங்களுக்கான சர்வே எண்களை அறிவித்து நிலங்களை கையகப்படுத்த உள்ளதாகவும், அதுகுறித்து 21 நாள்களுக்குள் முறையிடுமாறு திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.நிலங்களை முழுமையாக கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தற்போது ஒரு சென்ட் நிலம் ரூ.9 லட்சத்துக்கு விலை போகிறது.இதைக் கருத்தில்கொண்டு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடாக சந்தை மதிப்பைவிட 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து நிலம் கையகப் பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.