புதுவை அருகே உள்ளது கோட்டக்குப்பம் என்கிற பகுதி. இங்கு பழைய மர பொருட்களை வாங்கி அதை புதுபித்து விற்கும் 50-க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் உள்ளது. ஆரம்பகாலத்தில் இப்பகுதிக்கு அருகே ஆரோவில் இருப்பதால் இங்கு சில வெளிநாட்டவர்கள் வருகை தருவது உண்டு. எனவே இங்கு ஒரு சில பாரம்பரிய விற்பனையகங்கள் தொடங்கப்பட்டது. பின்னர் நாளடைவில் இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பழைய பாரம்பரிய மர பொருள் விற்பனையகங்கள் தோன்றியது.
புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் செட்டிநாடு வகை வீடுகள் என்று அழைக்கப்படும் பாரம்பரிய கட்டிடங்கள் ஏராளமாகவே உள்ளது.இந்தக் கட்டடங்களை காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படுவது உண்டு. அவ்வாறு இடிக்கும் போது பழையது என்று தூக்கி வீசப்படும் கதவு, ஜன்னல், இரும்பு சாமான்கள் போன்ற பழைய மரத்தாலான பொருட்களை வாங்கி, அதில் பயன்பட தகுந்த பொருட்களை புதுபித்து விற்கின்றனர். இங்குள்ள விற்பனையாளர்கள், மிகவும் மோசமான நிலையில் உள்ள மர பொருட்களை கூட மெருகேற்றி பாரம்பரியம் மாறாமல் விற்றுவருகிறார்கள். கதவு, ஜன்னல் மட்டுமின்றி ஒத்தவண்டி எனப்படும் மாட்டுவண்டி சக்கரம், மர உலக்கை, பெரிய மரத்தூண்கள், மரத்தாலான குதிரை, யானை போன்ற பொருட்களும் விற்பனையகத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள விற்பனையகத்தில் உள்ள பாரம்பரிய பொருட்களை வாங்க வெளி மாநிலத்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பாரம்பரியம் மாறாமல் திருமணம் செய்யவேண்டும் என நினைப்பவர்கள் கோட்டக்குப்பத்தில் உள்ள விற்பனையகத்திற்கு வந்து பாரம்பரியத்துடன் காட்சியளிக்கும் பீரோ, கட்டில், டைனிங் டேபில், சேர் போன்ற பொருட்களை வாங்கி செல்கின்றனர். பாரம்பரிய மர பொருட்கள் விற்பனையகங்கள் ஒருபுறம் இருக்க அதே பகுதியில், ட்ரங்கு பெட்டி எனப்படும் பழைய இரும்பு பெட்டிகள், பழைய பிலிம் ரோல், கேமரா பெட்டர்மாஸ் லைட், கிரமோபோன் போன்ற பழைய தொலைபேசிகள், வால்வு ரேடியோ, பழைய வகை டேப் ரெக்காடர், ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரக மது பாட்டில்கள், பழைய சமயல் பாத்திரங்கள், 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் என சுற்றி சுற்றி பார்த்து வியக்கவைக்கும் வகையில் மற்றொரு ரக பாரம்பரிய விற்பனையகங்களும் இங்கு உள்ளது. பழமை மறந்து நவீன வாழ்க்கை முறைக்கு மாறிவரும் மக்கள் மத்தியில் பாரம்பரியத்தை தேடி வருபவர்களுக்காக பாரம்பரியம் உயிர்தெழும் வகையில் இவர்கள் செய்யும் தொழில் பலரையும் கவர்ந்து வருகிறது.
Credit : EENADUINDIA