புதுச்சேரி புதுவை மக்கள் வாட்டர் கேன்களுடன் கோட்டக்குப்பத்துக்கு படையெடுப்பு
நன்றி ; தினகரன்
புதுச்சேரியில் 7,700 பேர்வெல் பதிவு செய்யப்பட்டு தினந்தோறும் இயங்கி வருகின்றன. இதுதவிர, பதிவு செய்யப்படாத 10,000க்கும் அதிகமான சிறிய மோட்டார் பம்பு செட்டுகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தேவைக்கு அதிகமான நிலையில், அதாவது 130 சதவீதம் நிலத்தடி நீரை எடுத்து நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் கடலோர பகுதிகளில் மேல் ஊற்றில் (50 மீட்டர் ஆழம்) கடல் நீர் உட்புகுந்தது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது 5 கிமீ தூரத்துக்கு உப்பு நீர் புகுந்துவிட்டது. தற்போது கீழ் ஊற்றிலிருந்து (100 மீட்டர்) தண்ணீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும், அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் தொகுதி தோறும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ரூ.7க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் முத்தியால்பேட்டை தொகுதியில் கீழ் ஊற்றிலும் கடல்நீர் உட்புகுந்து விட்டது. இதனால் முத்தியால்பேட்டை பகுதிக்குட்பட்ட காட்டாமணிக்குப்பம் வீதி, பெருமாள் நாயக்கர் வீதி, பெல்கீஸ் வீதி, சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் தண்ணீரை குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிநீருக்காக தினந்தோறும் தமிழக பகுதியான கோட்டக்குப்பத்திற்கு வாட்டர் கேன்களுடன் படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதுவரை அவர்களது குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குமுறுகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறிய கருத்துக்கள்:
பார்த்திபன் (மெக்கானிக்): முத்தியால்பேட்டையில் பைப் லைன் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பகுதியான கோட்டக்குப்பத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். ஒரு நாளைக்கு 2 கேன் தண்ணீர் தேவைப்படுகிறது. காலை, மாலை என இருவேளை மட்டும்தான் அங்குள்ள தண்ணீர் வரும். அந்த நேரத்தில் சரியாக சென்று தண்ணீர் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் குடிநீருக்காக கஷ்டப்பட வேண்டி இருக்கிறோம். எனவே, பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியிலேயே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வி (இல்லத்தரசி): சோலை நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டியிலிருந்துதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் உப்புதன்மையாக இருக்கிறது. இந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்த வைத்தால் பாத்திரங்களே வீணாகி விடுகிறது. இதனை எப்படி குடிக்க முடியும். மேலும், முத்தியால்பேட்டை தொகுதிக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மணிக்கூண்டு பக்கத்தில் இருக்கிறது. அதைவிட கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் எங்கள் பகுதிக்கு அருகிலேயே உள்ளது. இதனால் கோட்டக்குப்பம் சென்று இலவசமாக குடிநீர் பிடித்து வருகிறோம்.
குணாளன் (எலெக்ட்ரிஷியன்): குடிக்கவே முடியாதபடி தண்ணீரை கொடுத்துவிட்டு, அதற்கு அதிகமான கட்டணத்தை பொதுப்பணித்துறையினர் வசூலிக்கின்றனர். இது எந்த வகையில் நியாயம். கடந்த 6 மாதத்துக்கு முன்பு சோலை நகர் நீர்த்தேக்க தொட்டி அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க போவதாக கூறினார்கள். அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதுவரை கோட்டக்குப்பத்தில் தான் குடிநீர் பிடித்து கொண்டு வருகிறோம். அங்குள்ளவர்கள் யாரும் எங்களை எதுவும் சொன்னது கிடையாது. தினந்தோறும் புதுவையிலிருந்து கோட்டக்குப்பம் வந்து தண்ணி பிடிக்கிறோம். எங்களால் உங்களுக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா? என்று அவர்களிடம் ஒரு முறை கேட்டேன். அதற்கு, பக்கத்தில் இருப்பவர்களுக்கு நாமே தண்ணீர் தரவில்லை என்றால்… தமிழ்நாட்டுக்கு கர்நாடகக்காரன் எப்படிப்பா தண்ணீர் தருவான் என்று கூறினார்கள்… அன்றிலிருந்து நாங்கள் சுதந்திரமாக தண்ணீர் பிடித்து வருகிறோம்.மரியம்பி (இல்லத்தரசி): கார்ப்பரேஷன் தண்ணிய வாய்ல கூட வைக்க முடியல. அந்த அளவு உப்பு கரிக்கிது. சமையலுக்கு பயன்படுத்தினா சமையலும் வீணாகிடுது. எங்க வீட்டுல 3 பேரு இருக்கோம். ஒரு நாளைக்கு 2 கேன் தண்ணி தேவைப்படுது. அதனால கோட்டக்குப்பம் போய் தண்ணீர் புடிச்சி கிட்டு வர்றோம். நாங்க மட்டும் அங்க போயி தண்ணி பிடிக்கல. எங்க ஏரியால இருக்க எல்லா குடும்பமும் அங்கதான் தண்ணி பிடிக்கிறாங்க. இதுவரைக்கும் எந்த பிரச்னையும் வரல. ஒருவேளை நாளைக்கே ஏதாவது பிரச்னை வந்தால் வாட்டர் கேனோட குடிநீருக்காக அலைய வேண்டியதா இருக்கும். எனவே, புதுவை அரசு காட்டேரிக்குப்பத்திலேயே ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.